சென்னை மாநகராட்சியில் வார்டு வரி வசூல் அடிப்படையில் கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னை மாநகராட்சியின் வார்டுமேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்த மாநகராட்சிக் கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்துகின்றனர். ஆண்டுக்கு ரூ.700 கோடி சொத்து வரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், சுமார் ரூ.100 கோடி வசூலிக்க முடிவதில்லை. இதேபோல, தொழில் வரி இலக்கு ரூ.450 கோடியாக இருந்தாலும், அந்த அளவுக்கு வசூலிக்க முடிவதில்லை.

தொழில் உரிமம், கட்டிட உரிமம், வாகன நிறுத்துமிடக் கட்டணம், அங்காடி உரிமம், மாநகராட்சிக் கடைகள் வாடகை உள்ளிட்டவற்றில் ரூ.1,550 கோடியாவது வசூலிக்க வேண்டும். ஆனால் அதைவிடக் குறைவாகவே வசூலாகிறது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சிகவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 200 வார்டு உறுப்பினர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறும்போது, "2016-ல் ரூ.2 கோடியாக இருந்த சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, மாநகராட்சி கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியையும் குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக அடுத்த மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, "மாநகராட்சியின் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை வசூலிப்பதில் மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு சிரமம் உள்ளது. அந்த நிதியில் இருந்து கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால், அந்த நிதியை பேருந்து நிழற்குடை, பள்ளிக் கட்டிடம் சீரமைப்பு, மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற வழக்கமான பணிகளுக்கே கவுன்சிலர்கள் ஒதுக்குகின்றனர். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, புதிய திட்டங்களை உருவாக்குவதில்லை.

எனவே, ஒவ்வொரு வார்டிலும் எத்தனை சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு வார்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் கவுன்சிலர்கள், மாநகராட்சி வரி வருவாய் உயர்வுக்கு தங்கள் பங்களிப்பை ஆர்வத்துடன் செய்வார்கள்" என்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE