எல்லை தாண்டி மீன்பிடித்தால் உரிமம் ரத்து: மீன்வளத்துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

குமரி மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் நிலையில், எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விசைப்படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தொழில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். மீன்பிடி பணியின்போது அடிக்கடி கடல் எல்லையைத் தாண்டியதாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கிறது.

சமீபத்தில் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியாவில் 8 பேரும், செஷல்ஸ் தீவில் 33 பேரும் கைது செய்யப்பட்டனர். மறுநாளே மேலும் 25 பேர் செஷல்ஸ் தீவில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளச்சல் உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ் விடுத்துள்ள அறிக்கை:

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப்படகுகள், அத்துமீறி சட்டவிரோதமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1983, மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விசைப்படகு உரிமையாளர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கி விசைப்படகின் பதிவு மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேற்கொண்டு மீன்பிடிக்கச் செல்ல இயலாதவாறு விசைப்படகுகள் தொழில் முடக்கம் செய்து, மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.

விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரின தொழில்நுட்ப அடையாள அட்டை ரத்து செய்யப்படும். அத்துடன் அரசால் வழங்கப்பட்டு வரும் நிவாரணம், மானியம், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE