சென்னை: மத்திய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் கட்டுநர்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் மத்திய - மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரத்தில், 30வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த அழைப்பிதழின் அடியில் ஒரு வரியை நீங்கள் போட்டிருக்கிறீர்கள், “Role of Construction in Nation Building” என்ற வாசகத்தைப் படித்தேன். கட்டுநர்கள், இந்த மாநிலத்தின் - நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவர்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
மத்திய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் மத்திய- மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே இந்த 30-வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது. 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தென்னக மையம், அகில இந்தியக் கட்டுநர்கள் சங்கத்தின் பழமையான மையம் என்பதையும் தாண்டி, “தாய் மையம்” என்பதாலோ என்னவோ, அதே தாய் மனப்பான்மையோடு, மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலை வழங்கும் அமைப்பாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது.
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல - வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இருப்பது தான் இந்தச் சங்கத்தின் சிறப்பு என்பதை நான் உணர்கிறேன். சென்னை மையம் மட்டுமே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது என்று சென்னை மையத்தின் தலைவர் சாந்தகுமார் சொன்னார்கள். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்த மையத்தின் சார்பாக செய்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. அதற்காக நான் அரசின் சார்பிலே வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
» உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் நாடு திரும்ப விருப்பம்
» மார்ச் 12: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
வழக்கமாக, ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள். நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்தக் கட்டுமானத் தொழில் சந்தித்துக் கொண்டு வருகிறது என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர்) கோரக்கூடிய நடைமுறை ரத்து செய்யப்பட்டது. 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தப்பட்டது.
புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அளவிலேயே மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது. ஒப்பந்ததாரர் பதிவு ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றப்பட்டது. மதிப்பீடுகள் தயாரிப்பதற்கான தரவினை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் - கரோனா காலத்தின் தாக்கத்திலிருந்து கட்டுமானத்துறை இன்னும் மீளவில்லை என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.
அதை மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்தீர்கள். ஒப்பந்ததாரர் வகுப்பு 1-ல் பண வரம்பு 10 முதல் 25 கோடி ரூபாயாகவும், செல்வநிலைச் சான்று 1 கோடி ரூபாயாகவும், புதிய வகுப்பு -1A ஏற்படுத்தி அதற்கு பண வரம்பு 25 கோடி ரூபாய்க்கு மேல் நிர்ணயித்து - அதுக்கு solvency 3 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்க அகில இந்திய கட்டுநர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். பிற வகுப்புகளுக்கு தற்போதுள்ள solvency 30 சதவீதத்தில் இருந்து -10 சதவீதமாக குறைக்க கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.
அகில இந்தியக் கட்டுநர் கழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து- புதியதாக வகுப்பு 1-A ஏற்படுத்தி, solvency 10 சதவீதமாக - அதாவது 2.50 கோடி ரூபாய் எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இதர வகுப்புகளுக்கான Solvency, அனைத்து நிலை ஒப்பந்ததாரர்களும் பயன்பெறக்கூடிய வகையில் 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்
நீங்கள் எனக்கு கோரிக்கை வைத்தீர்கள். இப்போது நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கப் போகிறேன். ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர நீங்கள் முன்வர வேண்டும். தொன்மை வாய்ந்த இந்த மையம்- கட்டுமானப் பணிகளை தரத்துடன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, நீங்கள் இந்த அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டிக் கொடுத்து - வலிமை மிக்க கட்டடங்களாக கட்டிக் கொடுத்து - இந்த அரசுக்கு, “தூண்”போல் நீங்கள் துணை நிற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் , நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி , ரூபி மனோகரன், அனைத்திந்திய கட்டுநர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.என். குப்தா, துணைத் தலைவர் எஸ்.அய்யநாதன் , 0தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநிலத் தலைவர் ஆர்.சிவகுமார், தெற்கு மையத் தலைவர் எல். சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago