டாஸ்மாக் கடைகளை காப்பாற்ற அரசு கிராமசபை தீர்மானங்களை அவமதிக்கிறது: மநீம

By செய்திப்பிரிவு

சென்னை: நீதிமன்றங்களில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையின் மூலம் கிராமசபை கூட்ட தீர்மானங்களை அவமதிப்பதே வழக்கு பதிவு செய்ய காரணம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், மக்களுக்கு தொல்லை தரும் டாஸ்மாக் கடைகளை குறிப்பாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் அருகில் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என்பது அந்தந்த பகுதி மக்களின் தொடர் கோரிக்கை.

இந்த கோரிக்கைக்காக பலமுறை பல போராட்டங்களை சமூக இயக்கங்களும், பெண்களும் செய்து வந்துள்ளனர். காவல்துறையால் பலமுறை இந்த போராட்டங்கள் தடுக்கப்பட்டு சில நேரம் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் அன்றைய தேதிக்கு பிரச்சனையை தள்ளிப்போட டாஸ்மாக் நிர்வாகம் கடைகளை மூடுவதாக உறுதி கொடுத்துவிட்டு பின்னர் அது நடக்காமலும் போயுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து, பெரிய அளவில் பேசுபொருளாக மாறி செயல்பாட்டிற்கு வந்த கிராம சபைக் கூட்டங்களின் மூலம் நிறைவேற்றப்படும் டாஸ்மாக் குறித்த தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என்று மாறுபட்ட தீர்ப்புகள் நீதிமன்றங்களில் வந்த வண்ணம் இருந்தன. சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணையில், கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு தமிழகம் மதுவிலக்கு சட்டத்தின்படி, தமிழக சில்லறை மது விற்பனை விதிகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தது.

அதன் பொருட்டு வெளியான மார்ச் 2ம் தேதியிட்ட அரசிதழ் வெளியீடு எண் 9 அறிவிப்பில், தமிழக சில்லறை மது விற்பனை விதிகள் 8 மற்றும் 9 திருத்தம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. விதி 8-ன்படி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் கடை திறந்து மது விற்பனை செய்ய முடியாது. மதுக்கடை அமைப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் பட்சத்தில் அதை ஆட்சியர் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும். விதி 9-ன்படி மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்க வேண்டும். ஆட்சியரின் முடிவு ஏற்புடையதாக இல்லையென்றால் அவரது உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுவை ஆணையர் 60 நாட்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பித்து முடித்து வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சார்ந்து ஒரு வழக்கு வந்த பின் அரசு தரப்பு பதிலாக இல்லாமல், இது போன்ற மக்கள் நலன் முடிவுகளை இயல்பாகவே தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது. இப்பொழுதாவது இந்த அறிவிப்பு குறித்து எல்லா மக்களும் அறியும் வண்ணம் இதனை அனைவருக்கும் கொண்டு செல்ல அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் இதனை விளம்பரப்படுத்த வேண்டும். அதேசமயம் இந்த அறிவிப்பில் சொல்லியுள்ளது போல் மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடமிருந்து வரும் கருத்திற்கு மதிப்பளித்து அதனை செவ்வனே நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதியில் ஆட்சேபனைக்குரிய இடத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆட்சியரிடம் முறையிட வேண்டும். கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரும் தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கக் கூடாது. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல் முன்னர் பொது மக்களால் எதிர்க்கப்பட்டுஇன்னும் மூடப்படாமல் இருக்கும் கடைகள் பட்டியலிடப்பட்டு அவையும் மூடப்பட வேண்டும்.

இறுதியாக கிராமசபை கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்கள் அதற்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படும் என அரசு உறுதியுடன் இருந்தால், இது போன்ற வழக்கிற்கான தேவையே இருந்திருக்காது. நீதிமன்றங்களில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையின் மூலம் கிராமசபை கூட்ட தீர்மானங்களை அவமதிப்பதே இது போன்ற வழக்குகளுக்கு காரணம். மாற்று வருவாய்களை பெருக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துக்கொள்கிறது" எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்