சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டபோது ஜெயராஜ் உடல் முழுவதும் காயங்கள்: சாத்தான்குளம் வழக்கில் செவிலியர் சாட்சியம்

சாத்தான்குளம் போலீஸாரால் தாக்கப்பட்ட வியாபாரி ஜெயராஜ் உடல் முழுவதும் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்து வரப்பட்டார் என ஆண் செவிலியர் சாட்சியளித்தார்.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், போலீஸார் என 9 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலியர் அருணாசலபெருமாள் சாட்சியம் அளித்தார். அவர் கூறும் போது, கோவில்பட்டி கிளை சிறையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜை அழைத்து வரும்போது அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. போலீஸார் தாக்கிய தால் காயங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு ஜெயராஜ் காயமடைந்ததால் அவருக்கு செயற்கை சிறுநீர் பை பொருத்தப்பட்டது என்றார்.

இதையடுத்து விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

ஜாமீன் கோரி மனு

இந்நிலையில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் முதல் குற்றவாளி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE