திருப்பத்தூர்: எருது விடும் விழாவில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27- ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எருதுவிடும் விழா மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் எருது விடும் விழா வீராங்குப்பம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, வீதியில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டன.

இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் காளைகளை வாடிவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு விடப்பட்டன.

இதில், குறித்த நேரத்தில் இலக்கை அடைந்த ஜோலார்பேட்டை காளைக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், 2-ம் இடத்தை பிடித்த காளைக்கு ரூ. 75 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த காளைக்கு ரூ.50 ஆயிரம் உட்பட 51 காளைகளின் உரிமையாளருக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக எருது விடும் விழா வீதி குறுகலான பகுதியாக இருந்ததால் மாடு முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேரை அங்கிருந்த இளைஞர்கள் தூக்கிச் சென்று முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எருது விடும் விழாவையொட்டி ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE