சென்னை: "லட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் இரு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, முன்னெடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டும்" என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், ”விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் இன்றைய இரண்டாவது நாள் கூட்ட நிறைவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "இன்று காலை முதல் நீங்கள் தெரிவித்திருக்கக் கூடிய நல்ல கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கள ஆய்வில் சந்திக்கும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீங்கள் அரசிடம் கோரப்படும் உதவி ஆகிய அனைத்தையும் கவனத்தோடு கேட்டேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறந்த முறையிலே தங்கள் மாவட்டங்களில் அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் பேசும்பொழுது குறிப்பிட்ட ஒரு பிரச்சினையையும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்திருக்கிறீர்கள். அவற்றை, சம்பந்தப்பட்ட துறை தலைவர்களும் அரசுச் செயலாளர்களும் கவனமுடன் கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சில பகுதிகளில் தாக்கம் இல்லை: மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பல்வேறு துறைகள் மூலமாக நிதிகளை ஒதுக்கி அரசு செயல்படுத்தினாலும், அது சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது. எனவே, நீங்கள் எந்தெந்த துறைகளில், எந்தெந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உங்கள் மாவட்டம் சற்று பின் தங்கி உள்ளதோ அவற்றில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் மாவட்டத்தை மாநிலத்தின் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக ஆக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
» தமிழகத்தில் இன்று 112 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 42 பேர்: 327 பேர் குணமடைந்தனர்
» மார்ச் 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
எதற்கெல்லாம் முன்னுரிமை: மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய நீங்கள், உங்கள் மனதில் கொள்ளவேண்டிய ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதாவது மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும். மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது திட்டச் செயலாக்கத்திலும் வெளிப்பட வேண்டும். குறிப்பாக விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் துறையில் புதிய அடையாள அட்டை வழங்கும் பணிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். விடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய வேண்டும். காலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது போல, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அன்றைய தினமே அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, பிற துறைகள் மூலமாக அவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை ஒன்றிணைத்து அங்கேயே அதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதேசமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை அரசுப் பணிகளிலும், உதாரணமாக, பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் – அதிலும் குறிப்பாக நீர்நிலைப் புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றில் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
நேரடி ஆய்வுகள்: நான் முன்பே தெரிவித்தபடி, நேரடி ஆய்வுகள் - ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள், அங்கன்வாடிகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றை நீங்கள் கட்டாயம் தொடர்ந்து நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு, மாணவர்களுக்கு, எளியோர்களுக்கு என்ன வகையான சேவை எந்தத் துறையால் என்ன தரத்தில் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர முடியும் - குறைபாடுகள் இருந்தால் அதையும் திருத்த முடியும்.
ஊட்டச்சத்து குறைபாடு: நம் மாநிலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. உதாரணமாக, தருமபுரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 36 சதவிகிதம் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. ICDS என்னும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை நீங்கள் கவனமுடன் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு பொருளாதார அளவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஊட்டச்சத்து பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனை சரி செய்யவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக விளங்கும் நீங்கள், உங்கள் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பதற்கும், அந்த நேரத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, இறந்தவர்களின் உடல்களை மயானங்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறிய நடைபாலம் இல்லை என்ற நிலை கடந்த வெள்ளத்தின்போது தொலைக்காட்சி வாயிலாக சில மாவட்டங்களில் நாம் பார்த்தோம், வேதனைப்பட்டோம். அதே காரணத்தால், பள்ளிக் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் பள்ளிக்குச் செல்லும் நிலையையும் பார்த்தோம். இதுபோன்ற இடங்களை நீங்கள் பட்டியலிட்டு அக்குறைகளை போக்க வேண்டும் அதுதான் முக்கியமான முழுமையான நல்ல நிர்வாகமாக அமைந்திட முடியும்.
இரண்டு முக்கிய திட்டங்கள்: அடுத்தபடியாக இரண்டு முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்” மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்”, இந்த இரண்டு பெரும் திட்டங்களும் லட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் திட்டங்களாக இது அமைந்திருக்கிறது. அதே சமயம், பல்வேறு துறைகளின் தேவைகளை ஒன்றிணைத்து நிறைவேற்றவேண்டிய திட்டமும் ஆகும். இந்த இரு திட்டங்களையும் நீங்கள் முன்னுரிமை கொடுத்து முன்னெடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தருணத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். அது உங்கள் மாவட்டத்தின் ஆண்டுக் கடன் திட்டம் என்னும் “Annual Credit Plan” முறையாக செயல்படுத்துவதை நீங்கள் கண்காணித்து, மாதாந்திர வங்கியாளர் கூட்டத்தை நடத்தி கல்விக் கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், தொழில் முனைவோர்களுக்கான கடன் ஆகியவை முறையாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலிலும் திட்ட இலக்கின்படி வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இப்படி ஒவ்வொரு திட்டத்தினையும் நீங்கள் நுணக்கமாகக் கண்காணித்து, துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பலன் பெறுவதோடு மாநிலமும் மேம்படும். முழுமனதோடு, முழுஅர்ப்பணிப்பு உணர்வோடு நீங்கள் அனைவரும் இம்முன்னேற்றப் பணியில் ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவ்வாறு நீங்கள் பணியாற்ற உங்களுக்கு இந்த அரசு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்து" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago