’ஏர் இந்தியா’வை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ’ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்தாலும், ஓய்வு பெறும் வயது வரை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏர் இந்தியா குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்ற கூடாது. மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முதலீட்டை பாதுகாக்கவே அது டாடா நிறுவனத்துக்கு விற்கப்படுவதாக கருத்து தெரிவித்தார். பங்கு விற்பனை போன்ற பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE