உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து முடிவுக்கு வந்த பரோல்: புழல் சிறைக்கு திரும்பிய பேரறிவாளன்

By ந.சரவணன்

திருப்பத்தூர்: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை புழல் சிறைக்கு அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன்(52). முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறுநீரக தொற்று, மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் மனு அளித்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 28-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததால் பேரறிவாளனுக்கு 9 முறை பரோல் நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

எனவே, மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு ஜாமீன் வழங்கியும், மாதம் ஒரு முறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பேரறிவாளன் கையெழுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதைதொடர்ந்து, கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பரோல் காலம் முடிவடைந்ததால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால், காவல் துறையினர் ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு இன்று அழைத்துச் சென்றனர். திருப்பத்துார் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில்,10-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக பேரறிவாளனுடன் சென்னை புழல் சிறைக்கு தனி வாகனத்தில் சென்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது,‘‘கடந்த ஆண்டு மே மாதம் பரோலில் வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 9-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து, பேரறிவாளன் தனது பரோல் விடுப்பை ரத்து செய்தார். இதன் காரணமாக சிறை துறையினர் உத்தரவின்பேரில்,பேரறிவாளனை மீண்டும் சிறையில் ஒப்படைக்க சென்னை புழல் சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

சென்னை புழல் சிறையில் பேரறிவாளன் ஒப்படைத்த பிறகு, அவர் அங்கிருந்து ஜாமீனில் வெளியே வருவார். அதேநேரத்தில், கடந்த 9 மாதம் பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 3 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50 காவலர்கள் பேரறிவாளன் வீட்டில் தினந்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, அவருக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவருக்கு இதுவரை வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாதம் ஒரு முறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பேரிறவாளன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE