'மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்போரிடம் தயவுதாட்சண்யம் காட்டாதீர்' - காவல் துறையினரிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம் இன்று (10-3-2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் அவர் பேசியது: "மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் முதன்முறையாக மாவட்ட வன அதிகாரிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநாடாக இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கம், இன்று உள்ள காலநிலை மாற்றம், மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குத்தான் இந்த ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படுகிறது. இத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதற்காகத்தான் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை என்று பெயர் சூட்டியிருக்கிறோம். தமிழகத்தைப் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவொரு மிக முக்கியமான முன்னெடுப்பு. தற்போது நமது தமிழகத்தில் 24 விழுக்காடாக இருக்கும் மொத்த பசுமைப் பரப்பினை குறைந்தபட்சம் 33 விழுக்காடாக 10 ஆண்டுக்குள் உயர்த்திட வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். தமிழகத்தில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதிசெய்திடக்கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது.

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே, நமது அரசினுடைய குறிக்கோள். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. அவற்றைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ முன்னெடுப்பைத் தொடங்கி அதில் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வுகாண ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனித் துறையை அதற்காக நான் தொடங்கினேன். தற்போது உருவாக்கப்பட்டுள்ள “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற துறையிலே, தங்களது குறைகளை, தேவைகளை மனுக்களாகக் கொடுத்துள்ள மக்களின் குரல் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும். அந்தத் துறையில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து பொதுவான கோரிக்கைகள் மற்றும் தனிநபர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் எனத் தரம்பிரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதிசெய்திட வேண்டும்.

மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய வட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய வட்டார அளவில் களையப்பட வேண்டிய சிற்றூர் அளவில் செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் கண்ணீரோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும் தீர்வினை எதிர்பார்த்து தலைமைச் செயலகத்திற்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைக் கருணையோடு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகள் குறித்து துறைவாரியாகத் தொகுக்கப்பட வேண்டும்.

அதேபோல், பல தலைமுறைகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எனது கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளேன். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தனித்துவத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தரக்கூடிய இந்த உன்னதமான திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும், காவல்துறை கண்காணிப்பாளர்களையும் இந்தத் தருணத்திலே கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மாணவர்கள், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும் மாவட்டத்தின் தலைமை வழிகாட்டியாக நீங்கள் திகழ வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இந்த உயரத்தை அடைய யாரோ ஒருவர் தூண்டுதலாக வழிகாட்டியாக அமைந்திருப்பார்கள். அதேபோல் நீங்களும் தமிழக மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக மாறி ஊக்கப்படுத்தினால் அனைவரும் முதலிடத்தை அடைவார்கள்.

தமிழகம் ‘நம்பர்1’ என்ற நிலையை அடையும். எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பி நான் ஒப்படைக்கிறேன். நமது அரசின் சார்பில் தீட்டப்படக்கூடிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது உங்களைப் போன்ற மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. எனவே, நீங்கள் அனைவரும் நேர்மையாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத்தன்மையோடு, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் உங்களுக்கு இந்த அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாள்தோறும் என்னுடைய கவனத்துக்கு வந்த பல விஷயங்கள் குறித்து நான் பேச விரும்பினாலும் மாநாட்டின் முதல் நாளான இன்று உங்கள் கருத்துகளை முழுமையாக நான் கேட்க விரும்புகிறேன். மாவட்ட அளவில் உள்ள உண்மையான நிலவரங்களை அறிந்துகொள்ள நான் காத்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கருத்துக்களைத் தெளிவாக நீங்கள் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் நீங்கள் தயக்கமின்றி உங்களது கருத்துகளை எடுத்துச் சொல்லுங்கள். அவற்றை மேலும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.

உங்கள் மனதில் தோன்றக்கூடிய புதிய எண்ணங்களை, திட்டங்களுக்கான ஆலோசனைகளை, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய முன்னெடுப்புகளை விளக்கமாக இங்கே தெரிவிக்க வேண்டும். புதிய முன்னெடுப்புகளுக்கு நமது அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று சொல்லி என் உரையை இந்த அளவோடு நிறைவு செய்கின்றேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்