வடகரையில் விவசாய நிலங்களில் நான்குவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு: எல்லைக் கற்களை அகற்றி விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

திருமங்கலம் - கொல்லம் சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த கடந்த 2018 நவம்பர் மாதம் நெடுஞ்சாலைத் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலையானது விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம், புத்தூர், தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லுர் மேற்கு, புளியங்குடி கிழக்கு, வடகரை வழியாக புளியரை செல்கிறது.

புத்தூரில் இருந்து புளியரை வரை விவசாய நிலங்களில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சாலை நில அளவைப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நான்குவழிச் சாலையை விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திட்டத்தை அதே வழியில் செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வடகரை பகுதியில் நிலம் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பணியில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நடப்பட்ட சில கற்களையும் பிடுங்கி வீசியுள்ளனர். போலீஸார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள் பணியை நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திமுக கொடியுடன் கலந்துகொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழியில் நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என, திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால், மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக நான்குவழிச் சாலை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்கள் நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம்” என்றனர்.

“தேர்தலின்போது, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழியில் நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என, திமுகவினர் வாக்குறுதி அளித்தனர்’’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE