மாணவர்களின் நெஞ்சில் மதவாத சக்திகளால் நஞ்சைக் கலப்பதுதான் கல்விக்கு ஓர் அரசு செய்யும் பங்களிப்பா? - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின்கீழ் கல்வி மிக மோசமாகச் சீரழிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழமைவாதங்களும் மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

’திங்க் எஜு 2022’ (Think Edu-2022) கருத்தரங்கில் காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: "அனைவருக்கும் கல்வி என்ற முன்னெடுப்பை முதன்முதலில் பெரிய அளவில் செயல்படுத்தியது நமது தமிழகத்தில்தான். அத்தகைய சமூகநீதி விளைந்த மண் இது. அப்படிப்பட்ட இந்த மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில்தான் இன்று உங்களிடையே நான் உரையாற்றுகிறேன். நீதிக்கட்சித் தலைவர்கள், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் எனத் தொடர்ந்து வந்த முதல்வர்கள் அனைவருமே மாணவர்களை கல்விச் சாலைகளுக்கு அழைத்து வந்தார்கள். கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினார்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேர்ந்தால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்ற தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு இருந்தது.

திராவிட இயக்கத்தின் அடிப்படையிலேயே கல்வியை முதன்மைப்படுத்தும் நோக்கம் இருந்தது. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதிதான், தமிழகத்தை உயர்கல்வியில் முன்னேறிய மாநிலம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் புதிய கல்லூரிகளை தொடங்கினார். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்தார். இவை அனைத்துக்கும் மேலாக, தொழிற்கல்விப் படிப்புகள் அனைவருக்கும் சென்றுசேரப் பெரும் தடைக்கல்லாக இருந்த நுழைவுத்தேர்வு முறையை நீக்கினார். இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான பொறியாளர்களும் தலைசிறந்த மருத்துவர்களும் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு வித்திட்டது திராவிடப் பேரியக்கமும், ஒப்பில்லாத் தலைவரான கருணாநிதியும்தான்.

படிப்பதற்கே தகுதி வேண்டும் என்று தடைக்கற்களைப் போட்ட சமூகத்தில், படித்தால் தகுதி தன்னால் வந்துவிடும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்தோம். இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக்கலைப் போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்தத் தடைக்கல்லும் தூக்கியெறியப்படும். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்ததும் தமிழகம்தான். நூறாண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வடிவமைத்த, பண்படுத்திய, செதுக்கிய தமிழக கல்வி முறையை குலைக்க, நீட் தேர்வைப் போலவே, பழைய கருத்தாக்கங்களுக்கு, ‘புதிய கல்விக் கொள்கை’ என்று ஒப்பனை போட்டு, மீண்டும் கொண்டு வருகிறார்கள்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின்கீழ் கல்வி மிக மோசமாகச் சீரழிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழமைவாதங்களும் மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகிறது. கல்விச் சாலைகளில் வெறுப்புணர்ச்சிக்கு வித்திட்டு, இளம் பருவத்திலேயே மாணவர்களின் நெஞ்சில், மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்கிறார்கள். இதுதான் கல்விக்கு ஓர் அரசு செய்யும் பங்களிப்பா?

இதைத்தான் இந்த நாட்டில் உள்ள அறிவார்ந்தோரும், மனச்சாட்சி உள்ளோரும், நடுநிலையாளர்களும், கல்வியாளர்களும் அறச்சீற்றத்தோடு துணிச்சலோடு கேட்க வேண்டிய கேள்வி. இதுபோன்ற கல்விக் கருத்தரங்குகளில் நம் நாட்டின் கல்வியைச் சூழ்ந்துள்ள இதுபோன்ற தீமைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பது, மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் கட்சிகள் தங்களது பிற்போக்குக் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக அல்ல. கல்வி என்பது இந்த நாட்டின் சொத்து. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உரிமை. அதை மத்தியில் உள்ள ஓர் ஆட்சியின் கட்சி, ஆக்கிரமித்துச் சீரழிக்க நினைப்பது, இந்த நாட்டின் உயிர்க்காற்றைப் பறிப்பதற்கு சமம். இதை நல்லோர் யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

அதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட நிலையிலும், கல்வி முன்னேற்றத்திற்காக தமிழகத்தில், திமுக அரசு, பல்வேறு முற்போக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.கரோனா ஊரடங்குக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்திட ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டம். இத்திட்டத்தை உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான ழான் திரேஸ், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் செயல்படுத்த அம்மாநில அரசுக்குப் பரிந்துரை செய்கிறார்.

தமிழகத்திலுள்ள 24 ஆயிரத்து 345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. 6 ஆயிரத்து 992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளுக்கும் அகன்ற அலைவரிசை வசதி ஏற்படுத்தப்படுகிறது. நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ‘மாநிலக் கல்விக் கொள்கை’ உருவாக்கப்படவுள்ளது. கல்வி அறிவில் சிறந்த மாணவர்கள் என்பதோடு, அவர்களுடைய திறன் மேம்பாடு அடைய, கடந்த மார்ச்-1 அன்று, மிகப் புதுமையான ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பெருமை மட்டும் நமக்குப் போதாது. உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் சிறந்த தமிழ்நாடாக நாம் மாற வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்துக்குச் சென்றாலும் நான் இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன்.

அந்நிலையை எய்த, கல்வி யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. சாதி, ஊர், பின்புலம், பணம், மதம், உடை, பாலினம் எதுவும் ஒரு மாணவரின் கல்விக்குத் தடையாக அமைந்திடக் கூடாது. அத்தகைய சமூகத்தைப் படைக்கத்தான் போராடி வருகிறோம். கல்வி அறிவிலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்தவர்கள் தமிழக மாணவர்கள் என்று உலகம் இன்னும் இறுக்கமாக அரவணைத்துக்கொள்ளும் நாளை நோக்கி நாம் வேகமாக நடைபோட்டு வருகிறோம்.

சமூகநீதி மண்ணான தமிழகத்தில் நடைபெறும் இந்த இரு நாள் கருத்தரங்கில் இந்தியா முழுமையில் இருந்தும் பல்வேறு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளனர். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நல்ல மாற்றங்களுக்கு வித்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்