மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுத் தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கண்ட இரண்டில் எதையும் செய்யாமல், மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், திமுகவினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்களை அமைக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டு கூறிய திமுக, இப்போது அந்தப் புதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதற்குக் காரணம் திமுகவிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட ஒரு வாக்குறுதி. இதைத் தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.

2020-2021 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை மூலமான வருவாய் 2021-2022 ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்ற நிலையில், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறது. இதன் வாயிலாக 2022-2023 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் வரும் வரி வருவாய் 40,000 கோடியை தாண்டக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆக, ஐந்தாண்டுகளுக்கு முன் 'பூரண மதுவிலக்கு' அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, சென்ற ஆண்டு பொதுத் தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கண்ட இரண்டில் எதையும் செய்யாமல், மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பார்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ டாஸ்மாக் நிறுவனம் நடத்த முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் அனைத்து பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து திமுக அரசு தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.

மது ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வற்புறுத்தியவர் மு.க. ஸ்டாலின். இதனை முற்றிலும் மறந்து, "பூரண மதுவிலக்கு" என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, டாஸ்மாக் மூலம் வருமானத்தைப் பெருக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் பார்கள் மூடப்பட வேண்டுமென்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர். அதே சமயத்தில், மதுவிலக்கை மேற்கொள்ள ஒரு துரும்பைக்கூட இதுவரை கிள்ளிப் போடவில்லை.

மதுவுக்கு அடிமையானவர்கள் மது பழக்கத்திலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு எதிரான வகையில், சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி துளியும் கவலைப்படாமல், மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்