மதுரையில் பணிகளை தொடங்கினார் துணை மேயர்: சொந்த வார்டில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பொறுப்பேற்றநிலையில் 80-வது வார்டு கவுன்சிலரான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மேயர் இந்திராணி முதல்வர் ஸ்டாலினை சந்திக்கச் சென்று ள்ளார். அதனால், அவர் மேயராக பொறுப்பேற்ற பிறகு இன்னும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி அலு வலகத்தில் நேற்று முதல் தனது பணிகளைத் தொடங்கினார். தற்போது இவருக்கு முன்பு துணை ஆணையர் அலுவலகம் இருந்த அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறை புதுப்பிக்கப்பட்டு ஒரு ஓய்வு அறையுடன் அலுவலக அறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆணையர் கா.ப.கார்த்திகேயன் விடுமுறையில் சென்றுள்ளார். மேயரும் இல்லாதததால் துணை மேயர் அதிகாரிகள் யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை. தனது அலுவலகத்தில் இருந்து கொண்டே வரும் பொதுமக்கள் கோரிக்கைளைக் கேட்டு சம்ப ந்தப்பட்ட வார்டுகளில் அப்பிரச் சினைகளைத் தீர்க்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவரது 80-வது வார்டில் நீண்ட காலமாக அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்த பாதாள சாக்கடை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக அந்த வார்டின் நேரு தெருவில் பாதாள சாக்கடைக்கு புதிய இணைப்பை உருவாக்கிட நடவடிக்கை எடுத்தார். மேலும் புதிய இணைப்புக்கான தொட்டி மற்றும் குழாய் அமைப்பதற்கான பணிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

மேயர் இந்திராணி புதன்கிழமை மாநகராட்சி அலுவலகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்களை நியமிப்பது பற்றி ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE