தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை நடத்த ஆட்சியர் தடை: 1000+ காவல் துறையினர் குவிப்பு

By செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரத்தில் கனககிரீஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் கோயிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பங்குனி திருவிழாவை நடத்த ஆட்சியர் பா.முருகேஷ் தடை விதித்துள்ளார்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் மிக பழமையான கனககிரீஸ்வரர் சமேதபெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்நிலையில் 13-ம் நாள் விழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரிவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து, வருவாய் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வழக்கு தொடர்ந்தவருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக கூறி, மற்றொரு தரப்பினர் கடைகளை அடைத்து நேற்று முன்தினம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

இந்நிலையில் புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்க இருந்தது. கோயிலில் இன்று கொடியேற்றம் நடைபெறவும் இருந்தது. இதற்கிடையில், ஆட்சியர் உத்தரவின்படி மறு உத்தரவு வரும் வரை பங்குனி உத்திர திருவிழாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் தெரிவித்துள்ளதாக கோயில் செயல் அலுவலர் சிவாஜி நேற்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் வேலூர், தி.மலை உட்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்தஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேவிகாபுரம் முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனி நபர் தொடர்ந்துள்ள வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (9-ம் தேதி) நடைபெற உள்ளது. நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுமா? என்ற அச்சம், பக்தர்கள் மற்றும் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE