ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு மார்ச் 21-ல் ஆஜராக ஓபிஎஸ், இளவரசிக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. சசிகலா தரப்பில் இரண்டாவது நாளாக நடந்த குறுக்கு விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, ஆறுமுகசாமி ஆணையம் நேற்று (மார்ச் 7) முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவர்களும் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்றிருந்தனர். அப்போலோ மருத்துவர்கள் 4 பேர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி நேற்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பும், பின்னும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE