உலக மகளிர் தினம்: புதுச்சேரியில் ஒருநாள் கவுரவ காவல் நிலைய அதிகாரி ஆன கல்லூரி மாணவி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் கவுரவ காவல் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னம்பலம் முதலியார் வீதியைச் சேர்ந்த வைத்தியநாதன்-கலைவாணி தம்பதியின் மகள் நிவேதா(19). முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கம்பியூட்டர் சையின்ஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி. மாணவியான இவர் விமான படையில் கேடட் சார்ஜென்ட் ஆகவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு நாள் கவுரவ காவல் நிலைய அதிகாரியாக மாணவி நிவேதா நியமிக்கப்பட்டார். முன்னதாக, இன்று காலை என்சிசி உடையில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு மாணவி நிவேதா வந்தார். அப்போது காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்று, காவல்நிலைய அதிகாரி இருக்கையில் அமரவைத்தனர்.

பின்னர் காவலர்களுக்கான ரோல் காலில் பங்கேற்று காவல்த்துறை பணிகள் என்ன என்பதை தெரிந்துகொண்டார். தொடர்ந்து காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டு, அங்குள்ள ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார். அதன்பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏறி புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்துக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதனிடையே, முத்தியால்பேட்டை காவல் நிலையம் வந்த புதுச்சேரி காவல்துறை ஏடிஜிபி ஆனந்த மோகன், சீனியர் எஸ்பி தீபிகா ஆகியோர் மாணவி நிவேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது ஏடிஜிபி கூறும்போது, ‘‘கல்லூரி மாணவி நிவேதா படிப்பு, விளையாட்டு போன்றவைகளில் சிறந்து விளங்குகிறார். என்சிசியிலும் கேடட் சார்ஜென்ட்டாக இருக்கிறார். இவருக்கு இந்தப் பதவியை அளித்திருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த புதிய முயற்சியானது. நாளைய இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க பெண்களை ஊக்குவிக்கும்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும். பெண் காவல் அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் பெண்களின் பாதுகாப்பு, அதற்கு உண்டான நடவடிக்கைகள், மாற்றங்கள் ஆகியவற்றை கொண்டு வர இது ஊக்குவிக்கும். வரும் காலங்களில் பெண்கள் தங்கள் அதிகாரத்தை வைத்து மேலும் முன்னேர இது வழிவகுக்கும். மேலும் இந்த முயற்சி பொதுமக்களுக்கு, காவல்துறையின் மேல் உள்ள அச்சம், சந்தேகத்தை போக்கும். காவல்துறையின் மீது நம்பிக்கையும் வளரும் என்று நான் திடமாக நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாணவி நிவேதா கூறும்போது, ‘‘காவல்துறையில் நான் பணியாற்றும் இந்த நிகழ்வு ஒரு கனவு போன்று உள்ளது. இது பெரிய வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒருநாள் காவல் நிலைய அதிகாரியாக செயல்படுவதில் பெருமைப்படுகிறேன். எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாகி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இப்போது காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய இன்றைய நிகழ்வின் மூலம் வாழ்வில் நிச்சயம் சாதிக்க வேண்டும் என்ற பல்வேறு சிந்தனைகளை தூண்டியுள்ளது’’ என்றார்.

முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் கூறும்போது, ‘‘காவல்துறை சார்பில் ஒருநாள் நிலைய அதிகாரியாக மாணவி ஒருவரை நியமிக்க சீனியர் எஸ்.பி தீபிகா ஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனையின்பேரில் உலக மகளிர் தினமான இன்று காலை முதல் மாலை வரை மாணவி ஒருவரை நிலைய அதிகாரியாக நியமித்து இளைஞர்களை ஊக்கப்படுத்த திட்டமிட்டோம்.

கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் என்.சி.சி மாணவியான நிவேதாவை தேர்வு செய்தோம். நிவேதா சிறுவயதிலேயே தாயை இழந்து, கஷ்டப்பட்டு வளர்ந்து கல்லூரி படிப்பு வரை வந்துள்ளார். நன்கு படிக்கக்கூடிய மாணவியும் கூட. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் ஒரு ரோல் மாடலாக இருப்பார் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து இந்த பதவியில் நியமித்தோம்’’ என்று தெரிவித்தார்.

காவல்துறையினரின் இந்த புதிய முயற்சி அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்