"பெண்கள் முதலில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர்த்துவிட வேண்டும்...", "ஏன் உயர் படிப்பு படித்த ஒரு பெண்ணை அவளை விட குறைவாக படித்த ஓர் ஆண் திருமணம் செய்தால் என்ன ஆகப் போகிறது?", "பெண்கள் எல்லாம் தாய்மையுடையவர்கள் என்கிற ஒற்றை சால்ஜாப்பு வார்த்தைகளை வைத்துக்கொண்டு இன்று உறவுகள் ரீதியாகவும், குடும்ப வன்முறைகளில் பெண்கள் நிறைய பாதிக்கப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள்...”
- இப்படி சமகால பெண்களின் பிரச்சினைகளையும் தீர்வுகளையும் அனுபவ ரீதியில் தெளிவாக எடுத்து வைக்கிறார் திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர் டாக்டர். பிரீத்தி பார்கவி. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் உடனான சிறப்பு நேர்காணல்...
உங்களைப் பற்றி...
"எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை. தந்தை நாராயணன் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா ராணி இல்லத்தரசி. ஒரே ஒரு தங்கை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் குரூப் 2 அதிகாரியாக உள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். கணவர் பாபு மெக்கானிக்கல் இன்ஜீனியர். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2016-ல் மதுரையில் வணிகவரித் துறை உதவிக் கமிஷனராகவும், 2017-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று திருள்ளூரில் ஓராண்டு ஆர்டிஓ ஆக பயிற்சி பெற்றேன். சிவகங்கையில் வட்ட வழங்கல் அதிகாரியாகவும் பணிபுரிந்தேன். பிறகு மத்திய சென்னையில் ஆர்டிஓ ஆகவும், தற்போது திருவள்ளூரில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறேன்."
நீங்கள் துணை கலெக்டர் பதவிக்கு வந்தது எப்படி?
"எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், முதற்கட்டமாக குரூப் 1 தேர்வு எழுத முயற்சி செய்தேன். அதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கினேன். என் குழந்தை வயிற்றில் இருந்தபோது படிக்கத் தொடங்கினேன். அது சவாலாக இருந்தது. என் கணவர் நான் குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்."
பணியில் சந்தித்த சவால்கள்?
"சிவகங்கையில் வட்ட வழங்கல் அதிகாரியாக பணிபுரிந்தபோது, ரேஷன் பொருட்களை கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடபட்ட சுமார் 20 பேர் மீது நடவடிக்கை எடுத்தேன். அது மிகப்பெரிய பிரச்சினையாக எனக்கெதிராக கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாம் செய்யும் நடவடிக்கைகள் உண்மைக்குப் புறம்பாக இல்லாத பட்சத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் தைரியமாக எதிர்கொள்ளலாம். அதனை நான் தைரியமாக எதிர்கொண்டேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளைகளிலிருந்து சுமார் 400 பேருக்கு மேலாக கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டிருக்கிறோம். சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட நிலத்தடி நீர் ஆலைகள், ஆற்று மணல் கொள்ளைகளை, பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைத் தாண்டி தடுத்து நிறுத்தியது மிகுந்த சவாலானவை."
பெண்கள் அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸுக்கு வர என்ன செய்ய வேண்டும்?
"கடந்த 10 வருடங்களில் சிவில் சர்வீஸ் துறைக்கு பெண்களின் வரவு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. நிறைய பெண்கள் இந்த துறைக்கு வரவேண்டும். பள்ளி காலங்களில் இருந்தே பெண்களை மனதளவில் என்ன படிக்க விரும்புகிறார்களோ, அதனை நோக்கி அழகாக அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொடுத்து பயணிக்க வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பொதுவாக, பெண்கள் எந்த விஷயங்களாக இருந்தாலும் முதலில் அவர்களை, அவர்களே அச்சுறுத்தக் கூடாது. பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகம் சென்று வந்தாலும் சரி... அவர்கள் முதலில் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிப் பருவத்தில் இருந்தே தினமும் அன்றைய நாளிதழ்களைப் படிக்க வேண்டும். இந்த ஊரில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நுட்பமாக தெரிந்துகொள்ள வேண்டும். அந்த ஆர்வத்தை முதலில் நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே, இந்த சமூகம் பெண்களின் மீது அடிப்படையாக வைத்துள்ள கட்டமைப்புகளை உடைக்க வேண்டும். நன்றாக படித்து வேலையில் இருக்கும் தாய் தந்தையர்கள்கூட தங்கள் பிள்ளைகளை இந்தந்த படிப்புதான் படிக்க வைக்க வேண்டும் என்ற வரைமுறைக்குள் இருக்கிறார்கள். கூடவே, பெண் பிள்ளைகள் மனதில் `நல்ல மாப்பிள்ளை ஒருவர் அமைந்துவிட்டால் போதும்` என்பதை மந்திரம் போல சொல்லி வைத்துவிடுகிறார்கள். திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று அதற்குள்ளேயே அவர்களை ஆழ்த்தி விடுகிறார்கள்.
இன்று நன்கு படித்த ஒரு பெண்ணின் மனநிலை என்னவென்றால், திருமணம்... அதற்கடுத்து ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்துவிட்டால் போதும் என்பதாகத்தான் இருக்கிறது. பிறகு திருமண வாழ்க்கைக்குள் முழுவதுமாக முடங்கி, வெளியில் வந்து சமூகத்தின் மறுபுற கண்ணாடிகளில் முகம் பார்த்து தங்களை வெளிக்கொண்டு வர, ஒரு அரசு அதிகாரிகளாக முன்கொண்டு வர தயங்கி நிற்கிறார்கள். பெண்களே... உங்களின் தயக்கங்களை கண்ணாடிகளில் முகம் பார்த்துக்கொண்டே உடைத்தெறிந்து விடுங்கள். சீக்கிரமே, நீங்கள் எல்லோரும் அரசு துறைகளில் அதிகாரங்களில் அலங்கரிக்கலாம். உங்கள் லட்சியம் எதுவோ அதனை அடைய கடுமையாக உழையுங்கள்."
சமகாலத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்து...
"பெண்கள் முதலில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர்த்துவிட வேண்டும். இன்று வட இந்தியா, கேரளா போன்ற இடங்களில் எல்லாம் எவ்வளவு பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் தனக்கென்று ஒரு வேலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வைத்து, ஒரு வேலையில் இருக்கிறார்கள். ஆனால், நம் தமிழகத்தில் மட்டும்தான் கொஞ்சம் வசதி படைத்த பெண்களாக இருந்தால், அவர்கள் பிறவிப் பலனே திருமணம், குடும்பம் என்ற அளவில் சுருங்கி விடுகிறது. கிராமப்புறத்தில் இன்றும் இதனை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இது வருத்தம்தான். பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலை என்பது மனதளவில் பெண்களுக்கு பெரும் துணிவைத் தரக் கூடியது. அன்பான கணவர் கிடைத்துவிட்டார் என்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்பை வீட்டிற்கு வந்ததும் செலுத்துங்கள். அதிகாரத்தை பணியில் நல்லதொரு விதத்திற்காக பயன்படுத்துங்கள்."
பெண்களின் உயர் கல்வி தொடர்பாக பெற்றோருக்கான ஆலோசனைகள்...
”முதலில் பெற்றோர் நினைக்க வேண்டும். என் பிள்ளைகளை நாங்கள் படிக்கவைத்து நல்லதொரு வேலையில் சேர்த்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஏனென்றால் `கல்வி` தரும் அறிவுடன் `வேலை` தரும் அனுபவ அறிவும் சேர்ந்தால் வாழ்க்கையை முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
படிப்பையும், இல்வாழ்க்கையையும் முதலில் சம்பந்தப்படுத்திப் பார்க்க கூடாது. படிப்பு என்பது தங்களை மெருகேற்றி பகுத்தறிவை வளர்த்துக் கொள்வதற்கானது. இந்த அளவு உயர் படிப்பு படித்ததால் என் பெண்ணிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் படித்த படிப்பினாலேயே இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று காத்திருந்து பிறகு, பெண்ணின் படிப்புக்கு ஏற்ற படிப்பை படித்த மாப்பிள்ளையின் படிப்பிற்காகவே திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இது என்ன மனநிலை என்று தெரியவில்லை.
ஏன் உயர் படிப்பு படித்த ஒரு பெண்ணை அவளை விட குறைவாக படித்த ஒரு ஆண் திருமணம் செய்தால் என்ன ஆகப் போகிறது. முதலில் மன பொருத்தத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். பிடித்திருந்தால் நடத்தி வைக்க வேண்டும். படிப்பை மட்டுமே பார்த்து மற்ற விஷயங்களில் அவர்களின் மன எண்ணத்தை தெரிந்துகொள்ளாமல் திருமணம் நடத்தி சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும். காலம் காலமாக பெண்களுக்கு சொல்லப்பட்டு வரும் அறியாமை விஷயங்களை தற்காலங்களில் பொருத்தி பார்த்து இளம் பெண்களை, பெற்றோர் பயப்பட வைக்க கூடாது.
திருமணமான பெண்களுக்கு நான் தனியாகச் சொல்வது என்னவென்றால், தயவு செய்து திருமணத்திற்கு பிறகு எதுவும் நமக்கு சாத்தியம் இல்லை என்று உங்களை எந்தவொரு செயல்களுக்கும் செயல்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள். திருமணத்திற்குப் பிறகு இனி எப்படி படிக்க முடியும் என்று நினைக்காதீர்கள். வீட்டில் கிடைக்கும் அதிக நேரங்களை எல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக செலவழித்து படியுங்கள். நான் வயிற்றில் குழந்தையுடன் இருந்தபிறகே இதற்கு எல்லாம் அப்ளை பண்ணி வெற்றி பெற்றேன்.
அதுபோக, விஏஓ எக்ஸாம், எஸ்.பி.ஐ பேங்க் எக்ஸாம் எல்லாம் எழுதி கிட்டத்தட்ட 7 வேலைகள் எனக்கு கிடைத்தது. ஆனாலும் நல்லதொரு வேலையில் சேர வேண்டும் என்பதால், நான் மேலும் மேலும் எழுதி காத்திருந்தேன். அதற்கான பலன் கிடைத்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது இன்னும் பல சகோதரிகளுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை கொடுத்து, 10 பேர் எக்ஸாம் எழுதி வெற்றிப் பெற்று பணியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான்.”
பொதுவாக, வீடுகளில் ஆண், பெண் சமத்துவம்...
”நிச்சயமாக இல்லை. இன்று ஆண் - பெண் சமத்துவத்தை பெற்றோர்கள் வீட்டிலிருந்து தங்கள் குழந்தைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண் குழந்தை இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும். பெண் குழந்தை இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று எப்போதும் நிர்பந்திக்காதீர்கள். ஆண் பிள்ளைகளையும் வீட்டை பெருக்க, பாத்திரங்களைச் சுத்தம் செய்ய சொல்லுங்கள். அவர்கள் இன்னும் நன்றாக பொறுப்புணர்வு உள்ளவர்களாக வளர்வார்கள்.
எங்கள் வீட்டிலேயே எடுத்துக்கொண்டால், என்னைவிட பெரிய வேலை, சம்பளம் பெற்றும், நான் சொல்லாமலே என் கணவர் அந்த ஆண், பெண் ஏற்றத்தாழ்வு விஷயங்களை எல்லாம் உடைத்தார். நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்காக எல்லா சமையல் அறை வேலைகளை செய்து தருவார். ரொம்ப டயர்டாகி வந்திருந்தால், இந்தா காபி சாப்பிடு என்று போட்டுக் கொண்டு வந்து தந்திருக்கிறார். குடும்பத்தில் முதலில் இந்த பிரஸ்டீஜ் இஷ்யூவை உடைத்து விடுங்கள். ஆண், பெண் சமநிலை குழந்தை வளர்ப்பில் முக்கியத்துவமானது.
ஒவ்வொரு ஆணும் தங்கள் மனைவியானவள் நல்ல நிலையில், உயர்ந்த வேலையில் இருப்பதை பார்த்து, அவன் றெக்கை முளைத்து வானத்தில் பறப்பதை போல் சந்தோஷப்பட, பெருமைப்பட வேண்டும்.”
இன்றைய பெண்கள் சந்திக்கும் உறவு, உரிமை ரீதியிலான பிரச்சினைகள் குறித்து...
”பெண்கள் எல்லாம் தாய்மையுடையவர்கள் என்கிற ஒற்றை சால்ஜாப்பு வார்த்தைகளை வைத்துக்கொண்டு இன்று உறவுகள் ரீதியாகவும், குடும்ப வன்முறைகளில் பெண்கள் நிறைய பாதிக்கப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள். இன்றும் பெண்கள் சொத்துரிமை, வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்களா என்றால் கேள்விக்குரியதுதான். பெண்கள் அந்த உரிமைகளை மிக கவனமாக கேட்டுப் பெற வேண்டும். எந்த விதத்திலும் அதனை விட்டுவிடக்கூடாது.
அந்தக் காலத்தில் பெண்களுக்கு வீட்டில் சீர்வரிசை மட்டும் செய்து சமாதானப்படுத்தி விடுவார்கள். அவர்களும் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் அம்மா, அண்ணன்கள் மனது கஷ்டப்படுவார்கள், உறவுகள் பிரிந்து போய் விடும் என்று நினைத்து சொத்தில் பங்குகூட கேட்காமல் பாகப்பிரிவினையில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால் இது இந்தக் காலத்திற்குப் பொறுந்தாது.
பொதுவாக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எந்த விதத்திலும் அடிபணியக் கூடாது. இன்று எங்கெல்லாம் பெண்கள் முதல் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கான நீதி உடனே கிடைத்து விடுகிறது.
குடும்ப வன்முறைகளில் சைக்கோ மனநிலை உடைய கணவன்மார்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்கள் எல்லாம் தங்களுக்கு சரியான வேலை இல்லாததால் தான் அந்த கஷ்டங்களைத் தாங்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சில நேரங்களில் அதனை சகித்து சகித்து தற்கொலை வரை கூட போய்விடுகிறார்கள். இத்தகையப் பிரச்சினைகளைப் பெண்கள் மிகவும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வாழவே முடியாதபட்சத்தில் பிரிந்து தங்களை பெற்றோர்களோடு இணைத்து பயணிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும்.”
பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம்...
”நான் இதுவரை 200-க்கும் அதிகமான தற்கொலைகளைப் பார்த்திருக்கிறேன். காரணம் சொன்னால் இதற்காகவா இப்படி விலை மதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று தோன்றும். வீட்டுக்காரர் போன் எடுக்கவில்லை என்பது முதல் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை, கணவர் சரியில்லை, விவகாரத்து என்பதுவரை தீர்வு காணக்கூடிய சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய முடிவை எடுத்து விடுகிறார்கள் பெண்கள். முதலில் பெண்கள் தங்களைப் பலமானவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். முதலில் நமக்கு நாம் தான் மிகப்பெரிய சப்போர்ட் என்பதனை எல்லாவகையிலும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த 200 பெண்களில் சிலர் படித்திருந்தாலும் ஓருவருமே வேலையில் இல்லை என்பதுதான் பெரிய வேதனையான விஷயமே. இதிலிருந்தே தெரிகிறது தனக்கென ஒரு வேலையில் பெண்கள் இருந்தால் அவளால் எந்த ஒரு பிரச்சினையையும் சமாளித்து, தனித்துவமாக வாழ அந்த வேலை பெரும் ஊக்கம் கொடுக்கும் என்பதுதான்.
நம் மீது அதீத அன்பு செலுத்த ஒரு ஆண் வர வேண்டும் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். நம்மை பார்த்து கொள்ள நாம் போதும். நமக்கென்ன ஆசை, தேவை, கனவு என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்."
சோஷியல் மீடியாவில் பெண்கள் அணுகப்படும் விதம் குறித்து...
"உடல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு பெண் பிள்ளைகள் எந்த நேரத்திலும் அச்சப்படவே கூடாது. அதனை மற்றவர்களிடம் சொல்லி உடனே வெளியே கொண்டு வருவதன் மூலம் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.
பெண்கள் முதலில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பலவீனம் ஆகக் கூடாது. முக்கியமாக ஒரு ஐ லவ் யூ, ஒரு செல்லம், ஒரு அழகி என்று சொல்லிவிட்டால் அதற்கு உடனே மயங்கி பலகீனமாகி விடுகிறார்கள். அதனை எல்லாம் விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சோஷியல் மீடியாக்களில் வலம் வந்தால், நம்பகமான நபர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தால் மனதிற்குள் ஏற்றி கஷ்டமடையாதீர்கள். பிரச்சினை ஏற்பட்டால் தைரியமாக சைபர் க்ரைம் உதவியை நாடுங்கள்.
திருமணம், குழந்தை போன்றவற்றை பெற்றோர்களுக்காக பண்ணாதீர்கள். அதில் உங்கள் மனநிலை என்ன என்று பெற்றோர்களிடம் எடுத்து தெரிவியுங்கள். உங்களுக்கான விருப்பத்துடன் பெற்றோர்களுடனான வழிகாட்டுதல்களோடு அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணியுங்கள். வாழ்வு சிறக்கும்.
பெண்கள் அனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துகள்!"
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago