சென்னை: மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: " காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேகதாது அணை குறித்து நேற்று செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக மாநில முதல்வர், மேகதாது உள்ளிட்ட நீர்ப் பகிர்வு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும், இது குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும், இதனை செயல்படுத்துவதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் , மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றும், இப்பிரச்சினையை கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு மறுத்து வருகின்ற நிலையில், உபரி நீர்தான் தமிழகத்தை வந்தடைகிறது. இந்த உபரி நீரையும் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று தேசிய கட்சிகள் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகள் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருத்து தெரிவிக்காதது வருத்தமளிக்கும் செயலாகும். கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும்.
மேகதாது அணை கட்டப்பட்டால், காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழகத்திற்கு வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் சூழ்நிலை ஏற்படும் என்பதும், காவேரி நீரை நம்பி விவசாயம் செய்யும் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்பதும், இன்னும் சொல்லப்போனால், வேளாண் தொழிலே முடங்கும் சூழ்நிலை உருவாகும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும்தான் தமிழகத்தின் நிலைப்பாடு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
எனவே,தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago