மேகேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ”கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் விரைவில் மேகேதாட்டு அணை அடிக்கல் நாட்ட வாய்ப்பு உள்ளது, எனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த புதுடெல்லி செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் மேகேதாட்டு சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். மேகேதாட்டு விவகாரத்தை மேலும் சிக்கலாக்கத் துடிக்கும் கர்நாடகத்தின் முயற்சி கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பெங்களூரு வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கூறி விட்டதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துவதற்காகவே புதுடெல்லி செல்வதாகவும் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், மத்திய அமைச்சர் ஷெகாவத்தும் தெரிவித்து வரும் கருத்துகள் இயல்பானவையாக தெரியவில்லை. மேகேதாட்டு அணை தொடர்பாக தீட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய சதி நாடகத்தின் அறிமுகக் காட்சிகளாகவே இவை தோன்றுகின்றன. இவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது.

மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வராமல் அடுத்தக்கட்டமாக எதையும் செய்ய முடியாது. இத்தகைய சூழலில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், இல்லாத மேகேதாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதும், அதற்கு அடுத்த நாளே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் பெங்களூருவுக்கு வந்து கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசுவதும் தானாக நடந்ததாக கருதிக்கொண்டு தமிழக அரசு அமைதியாக இருந்தால், இறுதியில் இழப்பை சந்திப்பது தமிழ்நாட்டு மக்களும், விவசாயிகளுமாகத் தான் இருப்பார்கள்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஓராண்டுக்குள் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. அந்தத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்காக கர்நாடகத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அடுத்தடுத்து பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. இவற்றின் அடுத்தக்கட்டமாக மேகேதாட்டு அணை திட்டத்தில் ஏதேனும் சில மாற்றங்களைச் செய்து, அதன் நோக்கத்தையே மாற்றி மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், அப்படி ஒன்று நடந்தால் அது தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை பாலவனமாக்கி விடும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு பாயும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட எந்த உரிமையும் கிடையாது. ஆனால், உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் ஏமாற்றி அந்தத் திட்டத்திற்கு அனுமதி பெற்ற கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணையைக் கட்டி முடித்து விட்டது. மேகேதாட்டு அணை விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டினால், காவிரி ஆற்றில் நமக்குரிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு, கண்ணீர் விட வேண்டிய நிலை வரும்.

அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் நோக்கத்தை புரிந்துகொண்டு, அவற்றை முறியடிப்பதற்கான பதில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த நோக்கத்திற்காகவும், எந்த விதமான அணையும் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினர் நேரில் வலியுறுத்த வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்