தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், சேமிப்பு கிடங்குகளில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால், அவைசேதமாகி வருகின்றன. மேலும், இந்த நெல்லை அரைவைக்கு எடுக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த குறுவை சாகுபடியின்போது 4.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடை நேரத்தில் தொடர்மழை பெய்ததால், பல இடங்களில் மழைநீரில் நெல்மணிகள் மூழ்கின. இதனால், நெல்மணிகள் வயலிலேயே முளைத்தன. எஞ்சியவற்றை அறுவடை செய்தபோதும், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
எனினும், கடந்த கொள்முதல் பருவத்தில் (அக்.1 முதல் செப்.31 வரை) தஞ்சாவூர் மாவட்டத்தில் 10.54 லட்சம் டன், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள 13 உள்சேமிப்பு கிடங்குகள், 66 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், பல்வேறு திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதமாகி வருகின்றன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் பருத்தியப்பர் கோவில், சன்னாபுரம், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி, ராஜகோபாலபுரம், கோபிரளயம் உள்ளிட்ட இடங்களில் மலைபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய அக்கறை செலுத்தாததால், அவை சேதமாகி வருகின்றன. இதில், பருத்தியப்பர்கோவில் திறந்தவெளி கிடங்கில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து, நெல்மணிகள் சிதறி ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது. இந்த நெல்லை அரைவைக்கு எடுத்தால், அரசு கூறியுள்ள விகிதாச்சாரத்தில் அரிசியை தர முடியாது என்பதால், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை அரைவைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
விவசாயிகளிடம் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களை கூறி, நெல் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம், அந்த நெல்லை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை எனவும், நெல்லை கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாயை கட்டாயமாக பெறுவதில் காட்டும் முனைப்பை, நெல்லை பாதுகாப்பதில் காட்டுவதில்லை எனவும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
ஏற்றுக்கூலி ரூ.5 கட்டாயம்
இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியது: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல், கொள்முதல் நிலையங்களிலேயே வாரக்கணக்கில் தேங்குகிறது. இதனால் ஏற்படும் எடையிழப்புக்கு நாங்களும், சேமிப்பு கிடங்குகளில் சேதமானால் அங்குள்ள பணியாளர்களும்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. விவசாயிகளிடம் வாங்கும் பணத்தில், லாரிகளில் ஏற்றுவதற்கு மட்டும் மூட்டைக்கு 5 ரூபாயை கட்டாயமாக தர வேண்டியுள்ளது.
சுமை தூக்கும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.10 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். ஆனால்தெளிவான அரசாணை இல்லாததால் அது அமல்படுத்தப்படவில்லை என்றார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் க.இளவரி கூறியது: கொள்முதல் நிலையங்களில் ஆண்டுக்காண்டு நெல் கொள்முதல் உயர்ந்து கொண்டே செல்கிறது.ஆனால், போதிய சேமிப்பு கிடங்களும், நெல்லை பாதுகாக்கவும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பவும் உரிய ஏற்பாடுகளை செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்டதில் 25 சதவீத நெல்லை மாவட்டங்களில் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என விதி உள்ளது. ஆனால், சேமிப்பு கிடங்குகளில் பல லட்சம் மூட்டைகளை சேமித்துவைத்து ஏன் வீணாக்கி வருகின்றனர் என தெரியவில்லை என்றார்.
கள ஆய்வு செய்யப்படும்
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "கடந்த 2 ஆண்டுகளில் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் அரைவை ஆலைக்கு அனுப்பி வருகிறோம். கடந்த குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகளில் இருந்தபோது பெய்த தொடர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனினும், நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். திறந்தவெளி கிடங்குகளில் சேதமான நெல் மூட்டைகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago