இந்திய மாணவர்கள் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு ‘நீட்’ காரணமா?

By சி.பிரதாப்

இந்திய மாணவர்கள் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்வது தொடர்பாக கல்வியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திவருகிறது. நீட் தேர்வை ஆண்டுதோறும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதில் 7 முதல் 8 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் உக்ரைன், ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.

இதற்கிடையே ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த வாரம் முதல் போர் தாக்குதல்களை நடத்திவருகிறது. அதில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்காகச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேநேரம் ‘நீட்’ தகுதித்தேர்வு அமலான பின்னரே வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு கல்வியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் எம்.காளிதாஸ் கூறியதாவது:

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு தற்போது 88 ஆயிரம் இடங்கள்தான் (அரசு ஒதுக்கீடு) உள்ளன. தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் சுமார் 20 ஆயிரம் இடங்கள் வரை இருக்கும். இதில் அரசுக் கல்லூரிகளில் படிக்க கல்விக் கட்டணம் குறைவாக இருக்கும். மேலும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ.30 லட்சமும், நிர்வாக ஒதுக்கீடுக்கு ரூ.80 லட்சமும் செலவாகும்.

இதனால் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்குத்தான் மாணவர்களிடம் போட்டி நிலவும். இவற்றில் இடம் கிடைக்காத நிலையில், குறைந்த கல்விக் கட்டணத்தில் பிற நாடுகளில் மருத்துவம் பயில வாய்ப்பு அமையும்போது கணிசமான மாணவர்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் சராசரியாக 26 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பயில்கின்றனர்.

அதேநேரம், நமது மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கு நீட் தகுதித் தேர்வு காரணம் என்பது ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக நீட் நுழைவுத் தேர்வால் வெளிநாடுகளில் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஏனெனில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட்டாலும் இதே 88 ஆயிரம் இடங்கள்தான் பூர்த்தி செய்யப்படும். மேலும், வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.

அதேபோல், நம்நாட்டில் மருத்துவம் பயில்வதற்கு ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் தயாராகின்றனர். எனவே, நீட் தேர்வு இல்லாவிட்டால் தற்போதைய எண்ணிக்கையைவிட இரட்டிப்பான அளவிலே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

அதனால் மருத்துவப் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரித்து, அதற்கான கட்டணங்களையும் குறைத்தால் மட்டுமே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் ஆர்.ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, ‘‘நம்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர நீட் தேர்வில் 720-க்கு குறைந்தபட்சம் 500 மதிப்பெண் பெற வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி (113 மதிப்பெண்) பெற்றால் போதுமானது.

மேலும், படிப்புக்கான கல்விக்கட்டணமும் குறைவாகவே உள்ளது. அதனுடன், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் இங்குள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காதபோது பிற நாடுகளில் சென்று மருத்துவம் பயில்வதற்கு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முக்கியத்துவம் வழங்குகின்றனர்‘‘ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்