உக்ரைனில் ஒரு வாரமாக பதுங்கு குழியில் தவித்து வரும் மதுரை மாணவி: மகளை மீட்க தந்தை உருக்கமான வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கிய மதுரை மருத்துவக் கல்லூரி பல் மருத்துவ ஊழியர் மகள், கடந்த 10 நாட்களாக பதுங்கு குழியில் பதுங்கியுள்ளார். தண்ணீர், உணவு கிடைக்காமல் தவிக்கும் மகளை மீட்டு தருமாறு தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்பகுதிகளில் இந்தியாவை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிக்கியிருக்கின்றனர். ரயில், பஸ், கார் வசதி இல்லாததால் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அந்நாட்டு அதிகாரிகளும் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாணவர்களை எச்சரித்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் பல் மருத்துப் பிரிவில் பணிபுரியும் ஆலம் உசேனின் மகள் அஃப்ரின் ஃபர்ஸானா. இவர் உக்ரைனில் சுமி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் தொடங்கியது முதல் கடந்த 10 நாட்களாக தான் படிக்கும் பல்கலைக்கழகத்திலே உள்ள பதுங்கு குழியில் தங்கியுள்ளார். இங்கு அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 15 பேர் தங்கியுள்ளனர்.

போரில் மின் அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தண்ணீரும், உணவும் கிடைக்காமல் மாணவி அஃப்ரின் ஃபர்ஸானா மற்றும் அவருடன் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஆலம் உசேன் கூறுகையில், ‘‘பதுங்கு குழியில் அதிகமான மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்படுகின்றனர். அந்நாட்டு அதிகாரிகள் போர் நிறுத்தப்பட்ட இந்த நேரத்தில் பாதுகாப்பாக மணவர்களை வெளியெற்றுவதற்கு உதவி செய்யவில்லை. மத்திய அரசும், உக்ரைனில் உள்ள மற்ற பகுதி மாணவர்களை மீட்கின்றனர். சுமி பகுதியில் சிக்கிய மாணவர்களை மட்டும் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக எனது மகள் உள்ளிட்ட இந்திய மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE