"கல்வியின் நிமித்தமாக... குறிப்பாக மருத்துவக் கல்விக்காக நம் பிள்ளைகள் சிறிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு மொழி பிரச்சினை இருக்கிறது. இருந்தும் அவர்கள் செல்கிறார்கள். தனியார் துறையினர் மருத்துவத் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாதா? மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளுக்கான நில ஒதுக்கீட்டுக்காக சிறப்பான கொள்கைகளை வகுக்க முடியாதா?"
- உக்ரைனிலிருந்து குண்டுகளுக்கு நடுவே பங்கர்களில் உணவின்றி, தண்ணீரின்றி உயிர் பிழைக்க மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் நம் மாணவர்கள் சிக்கியுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைக்கும் கேள்விகள்தான் இவை. இங்கிருந்தே நாம் இந்தப் பிரச்சினைக்கு விடை காண முயற்சிப்போம்.
நீட் காரணமில்லை... சீட் பற்றாக்குறையும் இல்லை... - மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில நீட், போதிய மருத்துவ இடங்கள் இல்லாமையே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்ட, அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தமிழ்நாடு மாநில கிளையின் தலைவர் டாக்டர் ஆர்.பழனிசாமி.
இது தொடர்பாக அவர் நமக்கு அளித்தப் பேட்டியில், "இந்தியா முழுவதும் சரி, தமிழகத்திலும் சரி நிறைய மருத்துவக் கல்லூரிகள் உருவாகிவிட்டன. மருத்துவக் கல்வியில் தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. இங்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சேர்த்தால் 80 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 8000 மருத்துவ சீட் உள்ளன.
» சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் லீனா மணிமேகலையின் மனு தள்ளுபடி
» ’10 பேர் குற்றவாளிகள்’ - கோகுல்ராஜ் கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக நடந்தது என்ன?
தமிழகத்தில் ஆண்டுதோறும் வெளிநாட்டில் பயின்று வருபவர்களையும் சேர்த்து 10,000 மருத்துவர்கள் உருவாகின்றனர். அதனால், தமிழகத்தில் 500 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்றளவில் தரம் உயர்ந்துள்ளது. ஆகையால், தமிழகத்தில் போதிய மருத்துவ சீட் இல்லை என்பதால் மாணவர்கள் மருத்துவம் பயில வெளிநாடு செல்வதாகச் சொல்வது அபத்தமானது. அப்படிச் செல்லும் மாணவர்கள் ஒருவேளை பெற்றோரின் அழுத்தத்தினால் செல்லலாம். இல்லை, ஒப்பீட்டு அளவில் தமிழக தனியார் மருத்துவக் கல்லூரி செலவைவிட வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் செலவு குறைவு என்ற காரணத்தால் செல்லலாம்.
மருத்துவக் கல்வி தரம் என்று பார்த்தால் இந்தியாவில், தமிழகத்தில் மிக மிக அதிகம். உக்ரைன், சீனா, ரஷ்யாவிலிருந்து படித்துவிட்டு வரும் மருத்துவர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை. அங்கிருந்து வருபவர்கள் 10% பேர் தான் எஃப்எம்ஜி (Foreign Medical Graduate) தேர்வில் தேறுகிறார்கள். ஆகையால், பெற்றோர்கள் மாணவர்கள் இங்கேயே நன்றாகப் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
சொல்லப்போனால், தமிழகத்தில் இதற்கு மேலும் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க வேண்டாம். அது, அதிகமான பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலைப் போல் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கலாம். அதனால் இனி தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கவனத்துடன் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
போதிய மருத்துவ சீட் இல்லை என்பது வட இந்தியாவில் வேண்டுமானால் நிலவரமாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் போதுமான அளவு உள்ளது.
அதேபோல், இப்போது உக்ரைனில் இருந்து திரும்பி வந்துள்ள இந்திய மாணவர்களுக்காக எங்களின் தேசிய தலைமையகம் சார்பில் பிரதமர் மோடிக்கும், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளோம். அதில், உக்ரைனிலிருந்து வந்த மருத்துவ மாணவர்களை தற்காலிகமாக இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே படிக்க வைக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இதில் 2019-க்கு முன்னதாக நீட் தகுதித் தேர்வில் 50% மதிப்பெண் பெறாமல் வெளிநாடு சென்ற இந்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதித் தேர்வு வைத்தாவது இங்கேயே படிக்க ஏற்பாட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்" என்றார்.
வெளிநாட்டில் கல்வி... சில புள்ளிவிவரம்: மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்பது குறித்து லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் இயக்குநர் முகமது கனி சில முக்கியமான தரவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
"இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு முன்னதாக ஆண்டுக்கு 500 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் சென்றார்கள் என்றால், இப்போது ஆண்டுக்கு 1,000 மாணவர்கள் வரை செல்கின்றனர். இங்கே தமிழகத்தில் இளநிலை மருத்துவம் முடித்துவிட்டு, முதுநிலை மருத்துவத்திற்காக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டும். ஓராண்டு சராசரியாக இந்தியாவிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் உயர் கல்வி நிமித்தமாக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம். கரோனா பேரிடரால் கடந்த இரண்டாண்டுகளாக இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 55 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இப்போது மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக 8,000 மருத்துவ சீட்கள் உள்ளன. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வு எழுதியவர்கள் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர். அதில் 58% பேர் தேர்ச்சியடைந்தனர். 8,000 மருத்துவ இடங்களும் முழுவமையாக தமிழக மாணவர்களுக்கே கிடைக்குமென்றால், அதுவும் கிடையாது. ஆல் இந்தியா கோட்டாவில் சில இடங்களை இழந்து விடுவோம். இங்கே தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வேண்டுமானால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ரூ.90 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை செலவாகும். இந்த செலவு... இதுதான் நம் மாணவர்களை மிக முக்கியமாக வெளிநாடுகளுக்கு துரத்துகிறது.
அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு நாம் மாணவர்களை அனுப்பும்போது அந்த நாட்டைப் பற்றி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் முழுமையாக தெரிவித்துதான் அனுப்புகிறோம். அதையும் தாண்டி பிள்ளைகளைப் பெற்றோர் அனுப்புகின்றனர் என்றால், அதற்குக் காரணமும் கல்விக் கட்டணம்தான். அங்கே வெறும் ரூ.30 லட்சத்தில் அவர்களில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றுவர முடியும். மேலும், அங்கு தரும் பட்டம் ஐரோப்பா மருத்துவக் கவுன்சில், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவக் கவுன்சில் என பலதரப்பிலும் அங்கீகரிக்கப்படுகிறது.
ஆக, இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக சிறு, சிறு நாடுகளுக்கும் செல்ல இரண்டே காரணங்கள்தான் முக்கியமானவை. ஒன்று, கல்விக் கட்டணம். இரண்டு, இங்கு மருத்துவ இடங்களின் பற்றாக்குறை. இதே உக்ரைன் இன்னும் சில ஆண்டுகளில் போரிலிருந்து மீண்டு இயல்புக்குத் திரும்பினாலும் அப்போதும் நம் மாணவர்கள் அங்கே செல்லத்தான் செய்வார்கள். உக்ரைன் நாட்டுக்குச் செல்லும் மாணவர்கள் கட்டாயம் ஓராண்டுக்கு அந்த மொழியைக் கற்க வேண்டும். இறுதியாண்டில் உக்ரேனிய மொழி கேட்டுப் புரிந்து பேசும் திறனறித் தேர்வை வெல்ல வேண்டும். இந்தச் சவாலையும் சேர்த்து அவர்கள் எதிர்கொள்ளக் காரணம், தாய்நாட்டில் உள்ள சிக்கல்தான்.
இன்னும் அதிகபட்சம் 10 நாட்களில் அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டுவிடுவார்கள். எல்லோரும் வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் அதற்கப்புறம்? இப்போது அங்கு பயிற்சி மருத்துவம் பயின்று பாதியில் விட்டவர்கள் அதை இங்கே தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களின் நிலை என்னவாகும்? முதலாம் ஆண்டோ, மூன்றாம் ஆண்டோ மற்ற ஆண்டோ படித்தவர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு, என்எம்சி தேசிய மருத்துவக் கவுன்சில் புதிதாக ஒரு குழுவை அமைத்து ஆலோசிக்க வேண்டும். உக்ரைன் நிலையைப் பார்க்கும்போது அது எப்போது மீளும் என்பது தெரியாது. இந்த நிலையில் அந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே படிப்பைத் தொடர் அனுமதிக்க வேண்டும். அதற்கு என்மிசி ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிற நாடுகளில் பயில அனுமதிக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் செலவு மிகவும் அதிகம். இப்போதைக்கு பிலிப்பைன்ஸுக்கு இந்த மாணவர்கள் சென்று படிக்க அனுமதியளித்தால் அதற்கு நாம் ஏற்பாடு செய்யலாம். இல்லை, என்எம்சி இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு இந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 2019-ல் இருந்துதான் வெளிநாடு சென்று படிக்கவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற சூழல் இருக்கிறது. அப்படியென்றால், அதற்கு முன்னர் 2016, 17-ல் வெளிநாட்டுக்கு மருத்துவம் பயில சென்றவர்களை என்எம்சி அனுமதிக்குமா? ஆகையால், என்எம்சி இந்த 20,000 மாணவர்களுக்காக பிரத்யேகமான கொள்கைகளை வகுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
FMG தகுதித் தேர்வை புரிந்துகொள்வோம்... - "வெளிநாடுகளுக்கு மருத்துவம் பயிலச் செல்லும் மாணவர்களில் 90% பேர் எஃப்எம்ஜி தேர்வில் வெற்றி பெறுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தத் தேர்வைப் பற்றிய புரிதலும் அவசியப்படுகிறது. பிலிப்பைன்ஸ், உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களில் 70% பேர் முதல் முயற்சியிலேயே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிடுகின்றனர். மீதமுள்ளவர்களும் அடுத்த முயற்சியில் வெற்றி பெற்றுவிடுகின்றனர். மருத்துப் படிப்பு என்பது ஒன்றுதான் என்றாலும் அதைப் பயிற்றுவிக்கும் முறை மாறுபடும். அந்த மாறுபாட்டால் ஏற்படும் சிற்சில சிக்கல்களாலேயே FMG தகுதித் தேர்வு கடினமாக உள்ளது. மற்றபடி வெளிநாட்டில் பயிலும் மருத்துவம் தரமற்றது என்று இல்லை. இங்கு தமிழகத்தில் ஆண்டுக்கு எம்பிபிஎஸ் படிப்பை முழுமையாக முடித்து 5 ஆண்டுகளிலேயே வெளியேறுபவர்கள் வெறும் 45% தான். எஞ்சியவர்கள் ஆறு மாதங்களோ ஒரு வருடமோ அரியர்ஸ் தேர்வை எழுதியே பட்டம் பெறுகின்றனர். அதுபற்றி வெளிப்படையாகத் தெரியாததாலேயே FMG தேர்ச்சி விகிதம் பற்றிய விவாதங்கள் எழுகின்றன. விரைவில் உள்நாட்டிலும் NET நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்று ஒன்று வரப்போகிறது. அப்போது உண்மை அப்பட்டமாகத் தெரியும்.
இந்தியாவில் ஏன் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை..? - தமிழகத்தின் மக்கள் தொகை 8.5 கோடி. ஆனால், இங்குள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து சொச்சம். இந்த இடைவெளி மிகப் பெரியது. இதை நிரப்ப மாணவர் சமுதாயம் தகுதியாக இருந்தாலும் மருத்துவக் கட்டமைப்பு இல்லை. போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க விதிக்கப்படும் கெடுபிடிகள் நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கின்றன். 26 ஏக்கர் நிலம், விடுதி போன்ற வசதி இருந்தால் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுகிறது. சென்னை போன்ற நகரத்தில் 26 ஏக்கர் நிலம் கிடைக்குமா? ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அப்படி இடம் வாங்கி மருத்துவக் கல்லூரி ஆரம்பித்தால் நோயாளிகள் எப்படி வருவார்கள்? நோயாளிகள் இல்லாமல் மருத்துவம் பயில்வது சாத்தியமா? வெளிநாடுகளுக்கு அதுவும் சிறிய நாடுகளுக்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்றால் அங்கு மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு அப்படி வசதியாக உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் மட்டுமில்லை... சீனா, நைஜீரியா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடு மாணவர்கள், பாகிஸ்தான் மாணவர்கள் என 4.5 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். உண்மையில் இது உக்ரைன் பொருளாதாரத்துக்கு ஒரு வலுவான பக்கம்.
உக்ரைனில் நிறைய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கே மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தொடங்க இவ்வளவு கெடுபிடி இல்லை. ஒருவேளை இந்திய அரசு அதுபோன்று விதிமுறைகளை எல்லாம் தளர்த்த முடியாது என நினைத்தால் இப்போது இருக்கும் கல்லூரிகளிலேயே மாலை நேரக் கல்லூரிகளும் நடத்தலாம் அல்லவா? இதனால் மருத்துவ சீட் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. தமிழகத்தில் 232 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம். விடுதியில் மாணவர்களை தங்க வைத்துதான் பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது மாதிரியான சாத்தியக் கூறுகளை பரிசீலனை செய்தாலே இங்கேயே வெறும் ரூ.10 லட்சம் செலவில் 5 ஆண்டுகள் மருத்துவக் கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க இயலும்” என்றார் முகமது கனி.
இது அக்கறையின் வெளிப்பாடு தானா? - உக்ரைனில் மாணவர்கள் தங்களின் உயிருக்குப் பயந்து கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி இங்கே, ”நீங்கள் எல்லோரும் ஏன் சிறு நாடுகளுக்குச் செல்கிறீர்கள். தனியார் ஏன் மருத்துவக் கல்வியில் முதலீடு செய்யக் கூடாது?” என்று கேட்பது அக்கறையின் வெளிப்பாடு தானா என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
"எல்ஐசியின் பங்குகளில் 20% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதிக்கும் அதே நாளில், பிரதமர் மருத்துவக் கல்வி முதலீட்டில் தனியாருக்கு அழைப்பு விடுக்கிறார். எல்ஐசி என்பது நாட்டின் மிகப்பெரிய லாபம் ஈட்டி அரசுக்கு டிவிடெண்டுகளை குவிக்கும் நிறுவனம். பிரதமரானவர் அந்த லாபத்தை எடுத்து மருத்துவக் கல்லூரி உட்கட்டமைப்பக்கு பயன்படுத்துவேன் என்று கூறினால் அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் என்ற கேள்வியில் உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரின் பேச்சு கொடுத்த துணிச்சல்தான் மற்ற அமைச்சர்கள் சில அபத்தான, அவதூறான கருத்துகளை வெளியிடக் காரணம். அதனால் பெரும் பணக்காரர்களும், 'நீட்'டை எதிர்கொள்ள முடியாதவர்களும்தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள் எனக் கூறுவது அபத்தம். இங்கே போதிய மருத்துவ சீட் இல்லை, தனியார் கல்லூரிகளில் சாமானிய மக்களால் 1 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த முடியாது என்பதனால்தான் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா தனது வலைதளத்தில் எத்தனை சீட் இங்கு இருக்கிறது, எத்தனை மாணவர்கள் மருத்துவம் பயில வெளிநாடு செல்கிறார்கள், எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்கள் என்பது உட்பட் விவரங்களையும் வெளியிடுகிறது. அந்தப் புள்ளிவிவரங்களே இந்திய மாணவர்கள் மதிப்பெண் தகுதியுடன்தான் அங்கு செல்கிறார்கள் என்பதற்கு சாட்சி.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிறது. அங்கு கட்டணம் குறைவாக இருக்கிறது. ஆனால், பிரதமரோ மாநிலங்கள் நிலம் ஒதுக்க வேண்டும்; தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். எதற்காக அப்படிச் செய்ய வேண்டும் என்பதே எனது கேள்வி. மாநில அரசுக் கல்லூரியில் மத்திய அரசு முதலீட்டை அதிகரித்து இடங்களை அதிகரித்து உதவலாமே. மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வியைத் தரும் தமிழகம் போன்ற மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
உடனடியாக அரசு செய்ய வேண்டியது, போர் என்ற அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இப்போதைய சூழலில் உக்ரைனிலிருந்து வரும் மாணவர்கள் எஞ்சியுள்ள ஆண்டுகள் படிப்பை இங்கேயே அவரவர் மாநிலத்திலேயே, இல்லாவிட்டால் வேறு நாட்டில் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான நிதியுதவியையும் செய்ய வேண்டும். ஏன் வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றீர்கள் என்று கேள்வி கேட்ட பிரதமர், அந்த நாட்டில் படிக்கச் சென்ற மாணவர்கள் இங்கேயே அதே கட்டணத்தில் படிக்க வைக்க பிரதமர் வழி செய்யலாமே? அதைவிடுத்து பேரிடர் காலத்தையும் தன் பிரச்சாரத்துக்காக யாரேனும் பயன்படுத்தினால் அது ஆபத்தானது” என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
உயர்க் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துக... - உயர் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் இந்தப் பிரச்சினை குறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ”இந்தியா ஏதோ சின்னஞ்சிறு நாடல்ல. உலகிலேயே மிகச் சிறந்த புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ளோம் என்று பிரகடனப்படுத்தும் நாடு. ரஷ்யாவுடன் நட்புறவில் இருக்கும் நாடு. அப்படியிருக்கும்போது முன்கூட்டியே இந்தச் சூழலை கணித்திருக்க வேண்டாமா? ரஷ்யாவுடன் பேசி நிலவரம் என்னவென்பதை அறிந்திருக்க முற்பட்டிருக்க வேண்டாமா? உக்ரைனில் உள்ள தூதரகத்தில் இதனை ஊகிக்கக்கூடிய திறன் கூட இல்லாதவர்களையா அரசு பணியமர்த்தியிருக்கிறது என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இப்படியான முன்கூட்டி எச்சரிக்கையை வெளியிடாததே முதல் தவறுதான்.
உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் ரூ.94,000 கோடி இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது. அந்தப் பணத்தை பயன்படுத்தினாலே இந்தியாவிலேயே எத்தனையோ மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியிருக்கலாம். நம் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம் அந்த மக்கள் தொகை எண்ணிக்கை வளர்ச்சிக்கேற்ப மக்களுக்கு குறிப்பாக இதுபோன்ற மாணவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
உள்நாட்டிலேயே மாணவர்களுக்கு தேவையான கல்விக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு இந்த மாதிரியான வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் 17 வயது குழந்தையை வெளிநாட்டில் படிக்கத் துரத்தும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். 17 வயது முதல் 21 வயது வரை கட்டாயமாக உள்நாட்டிலேயே கல்வி கற்பதுதான் மாணவர்களுக்கு நல்லது. அப்படியென்றால் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். மக்கள் சக்தியை பெரிய சக்தியாக்க வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் சிறந்த கருவி. கல்விக்கான வசதியை மேம்படுத்தாமல் இந்தியா வேறு எதையும் சாதித்தாக மார்த்தட்டிக் கொள்ள முடியாது. இதெல்லாம் கட்சிகள் தாண்டி நடக்க வேண்டும். இன்றைக்கு ஒரு கட்சி இருக்கும், நாளை வேறொரு கட்சி இருக்கும். ஆனால் எல்லா ஆட்சியில் மாணவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நாங்கள் மிகப் பெரிய தேசம் எனப் பறைசாற்றும் இந்தியா, முதலில் மாணவர்களுக்கு தரமான கல்வி உள்நாட்டிலேயே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உக்ரைன் போர் மற்றும் கரோனாவால் பாதித்த நாடுகளில் இருந்து திரும்பிய மாணவர்கள் பயிற்சி மருத்துவக் கல்வியை இங்கேயே மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை எல்லாம் நான் டேமேஜ் கன்ட்ரோல் உத்தியாகத்தான் பார்க்கிறேன். உண்மையில் இந்திய மாணவர்களுக்காக நீடித்த, நிலைத்த திட்டம் என என்ன வைத்திருக்கிறார்கள் என்பதே எனது கேள்வி.
17 வயதில் கண் காணாத நாடுக்கு படிக்க அனுப்பும் பெற்றோரையும் நான் குறை சொல்வேன். ”எப்படியாவது படிப்பை முடித்து வா” என்று பிள்ளைகளின் உயிருக்கு மேல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் முட்டாள்தனமே. அப்படி மூளைச்சலவை செய்பவர்களிடம் ஏமாறக் கூடாது என்று அறிவுறுத்துகிறேன்.
எனவே, இதுபோன்று மாணவர்கள் அயல் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டுமானால் மத்திய அரசு உயர் கல்வி உட்கட்டமைப்பு, அது மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்விக்குமான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதை விடுத்து கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தால் அது கல்வியை வியாபாரமாக்குமே தவிர வேறு எந்த நன்மையையும் செய்யாது” என்றார் நெடுஞ்செழியன்.
’உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா என வெளிநாடுகளில் மாணவர்கள் கல்வி கற்கச் செல்லக் காரணம் இங்கே பயில தகுதி போதாமை அல்ல... கல்வி உட்கட்டமைப்பின் போதாமை. இது ஏதோ ஆப்பிரிக்க கண்டத்தின் பின் தங்கிய நாட்டில் நிலைமை என்றால், அதற்கு வறுமை உள்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், 3 பில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குக் கனவு காணும் இந்தியாவின் நிலைமை என்றால், அதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது’ என்கின்றனர் கல்வியாளர்கள். இப்பிரச்சினையை அரசு கையில் எடுக்கட்டும், தீர்வு காணட்டும்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago