தாம்பரம்/காஞ்சி/ஆவடி: தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள் நேற்று பதவி ஏற்றனர். துணை மேயர்களும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
தாம்பரம் மேயர் பதவிக்கு க.வசந்தகுமாரி போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. தற்போது இவர் மேயராக தேர்வு பெற்று, பொறுப்பேற்றுள்ளார். தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணனுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோர் மேயருக்கான செங்கோலை அளித்தனர். முன்னதாக வசந்தகுமாரிக்கு மேயருக்கான அங்கியை ஆணையர் மா. இளங்கோவன் வழங்கினார்.
போட்டியின்றி மேயராக தேர்வாகியுள்ள வசந்தகுமாரி, மிகவும் இளம் வயதில் (25 வயது) தாம்பரம் மேயராகி உள்ளார். தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இவர்தான். நேற்று இதுதொடர்பாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், அதிமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 2:30 மணிக்கு துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. அதிலும், திமுக கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திமுக சார்பில் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.காமராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேயர் வசந்தகுமாரி, உறுப்பினர்கள் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமியை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக பெரும்பான்மை பலம் பெற்றிருந்த போதிலும் மகாலட்சுமியை எதிர்த்து திமுக சார்பில் வெற்றி பெற்ற சூர்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் காஞ்சிபுரம் மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 50 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்று வாக்களித்தனர்.
இதில் மகாலட்சுமி 29 வாக்குகளையும், சூர்யா 20 வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9 வாக்கு வித்தியாசத்தில் மேயர் தேர்தலில் மகாலட்சுமி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி துணை மேயர் தேர்தல் மாலையில் நடைபெற்றது. இதில் துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரநாதன் போட்டியின்றி தேர்வானார்.
ஆவடி மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த கு.உதயகுமார், துணை மேயர் வேட்பாளராக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் ச.சூரியகுமார் அறிவிக்கப்பட்டனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் கு. உதயகுமார், மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ஆணையர் ஆர். சரஸ்வதி, மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து மேயர் பதவிக்கான அங்கி, செங்கோல் ஆகியவற்றையும் வழங்கினார். பிறகு, மதியம் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் ச.சூரியகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் மற்றும் துணை மேயராக பதவி ஏற்ற கு.உதயகுமார், ச.சூரியகுமார் ஆகிய இருவரையும், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதிமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் இரா. அந்திரிதாஸ், கவுன்சிலர்கள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.