திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

By செய்திப்பிரிவு

களக்காடு நகராட்சியின் முதல் தலைவராக சுயேச்சையாக வெற்றிபெற்று, சமீபத்தில் திமுகவில் இணைந்த சாந்தி சுபாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. திமுக 10, அதிமுக 6, சுயேச்சைகள் 11 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். திமுகவுக்கு 3 அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் 10-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சாந்தி சுபாஷ் திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திசையன்விளை

திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் சார்பில் தலா 2, பாஜக, தேமுதிக தலா 1, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதில் 2 சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர்.

திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சுபீனாவுக்கு முன்மொழிய யாரும் வரவில்லை. அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுயேச்சையாக வெற்றிபெற்று, திமுகவில் இணைந்த கமலா நேரு திமுக சார்பிலும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் இருவரும் தலா 9 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் அறிவித்தார்.

ஆனால் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில், திமுகவினர் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். திமுகவினருக்கு எதிர்ப்பு தெரி வித்து, அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE