தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ’சுய பரிசோதனை’யின் தொடர்ச்சியாக இருக்கலாம்: தினகரன்

திருவண்ணாமலை: அதிமுகவில் சசிகலாவையும் தன்னையும் சேர்ப்பது தொடர்பாக, தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயபரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆரணியில் இன்று நடைபெற்ற அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: “அதிமுகவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சினையை எட்டிப் பார்த்து கருத்து சொல்ல, நான் விருப்பப்படவில்லை.

தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அமமுக மற்றும் எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது சுய பரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அக்கட்சி ஒருமித்த கருத்தாக முடிவெடுத்து தெரிவித்த பிறகுதான், பதில் தெரிவிக்க முடியும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. காலம், சரியான நிலையை உருவாக்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து எனக்கு ஆரூடம் சொல்ல தெரியாது. வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்கலாம்.

உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள தமிழக மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும், பாதுகாப்பாக மீட்டு, உயிர் சேதம் இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE