”அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை” - திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேட்டி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: "திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்" என்று புதிய மேயராக இன்று பொறுப்பேற்ற ந.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் இன்று காலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு 37 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். 2 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அணிமாறிய அதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 40 பேர் பங்கேற்று மேயர் வேட்பாளர் தினேஷ்குமாருக்கு ஆதரவளிக்க, அவர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மேயராக தினேஷ்குமாரை அறிவித்து, சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து செங்கோல் வழங்கப்பட்டு, மேயருக்கான அங்கி மற்றும் அணிகலன்களை அணிந்து வந்து மாநகராட்சி மைய மண்டபத்தில் அமர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கையெழுத்திட்டார். தொடர்ந்து அவையில் இருந்த 40 கவுன்சிலர்களுக்கும், மேயர் பட்டு வேட்டி மற்றும் பட்டு சேலை வழங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியது: "தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், திருப்பூரை முன்னோடி மாநகராட்சியாக, தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்றிக்காட்டுவோம். தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லப்படும். தொழிலாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும் இருக்கிற கனவுகளை நிறைவேற்றுகிற வகையில் மாநகராட்சியின் பணிகள் இருக்கும்.

திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உட்கட்டமைப்பு பலப்படுத்தப்படும். பாதாள சாக்கடை திட்டம், தார்ச் சாலை திட்டம் போன்றவை நிறைவடையாமல் உள்ளது. இந்தத் திட்டங்களை முடிப்பது முதல் பணியாக இருக்கும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். வெளிப்படையாக நிர்வாகம் செய்யப்படும். போர்க்கால அடிப்படையில் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்" என்று தினேஷ்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் வாய்ப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரான ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் நடந்த மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவரும் போட்டியின்றி தேர்வு செய்வதாக, மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளிலும் அதிமுக, தமாகா மற்றும் பாஜகவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE