பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை காங்கிரஸிடமிருந்து பறித்த திமுக: கவுன்சிலர் ஏமாற்றம்

By பி.டி.ரவிச்சந்திரன்

வத்தலகுண்டு: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தநிலையில், திமுகவைச் சேர்ந்த கல்பனாதேவி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் கவுன்சிலர் சியாமளா ஏமாற்றத்துடன் திரும்பினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக-8, காங்கிரஸ்- 2, அதிமுக, பாஜக., தலா ஒன்று, சுயேச்சைகள் மூன்று பேர் வெற்றிபெற்றிருந்தனர். இந்நிலையில் 2 வார்டுகளில் மட்டமே வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பேரூராட்சி தலைவர் பதவியை திமுக தலைமை ஒதுக்கியது. இதனால் திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர்.


பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த கல்பனாதேவி

தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராக கவுன்சிலர் சியாளமாவை காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்தது.

இந்நிலையில் நேற்று காலை பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சியாமளா மனுத்தாக்கல் செய்யவந்தபோது, வேட்புமனுவை, முன்மொழிய, வழிமொழிய திமுகவின் கையெழுத்திடவில்லை.

இதனால் அவரால் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நகரசெயலாளர் அருண்குமாரின் மனைவி கல்பனாதேவி தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் கல்பனாதேவி பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமாதேவி அறிவித்தார்.

வேட்புமனுத்தாக்கலுக்கு திமுகவினர் ஒத்துழைப்பு தராதநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சியாமளா ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE