ஆவின் தயிர், நெய் உள்ளிட்ட உப பொருட்களின் விலை உயர்வு: அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆவின் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது.

இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். திமுக அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்றழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்த திமுக அரசு தற்போது அனைத்து உப பொருட்களின் விலையினை உயர்த்தியுள்ளது.

வெளிச்சந்தையை ஒப்பிடும்போது, தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள், ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களையே வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஆவின் விற்பனை நிலையங்களில் பால் உப பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக, 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் இன்று முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல், 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக, அதாவது 25 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ஐஸ்க்ரீம் வகைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில், பால் உப பொருட்கள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் இன்னும் அதிகம் வாங்கக்கூடிய நிலையில், இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கரோனாத் தொற்று ஓரளவு குறைந்து இயல்பான நிலைமை திரும்பிக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், உக்ரைன்-ரஷ்யா போரினால் பெட்ரோல் விலை, டீசல் விலை ஆகிய எந்த அளவுக்கு உயரப் போகிறதோ, அதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை எந்த அளவுக்கு உயரப் போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில், யாரும் எதிர்பாராத விதமாக பால் உப பொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது திமுக அரசு கூடுதல் சுமையை சுமத்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் உப பொருட்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்
என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்