அரவக்குறிச்சி தலைவர் பதவி: அதிருப்தி திமுக பேரூர் செயலாளர், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: அரவக்குறிச்சி தலைவர் பதவியை தன் மருமகளுக்கு வழங்காத அதிருப்தியில் திமுக பேரூர் செயலாளர் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் காந்திமதி மேரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 9 வார்டுகளில் திமுக-வும், 2 வார்டுகளில் அதிமுக, தலா 1 வார்டுகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சுயேச்சை வெற்றிப்பெற்றனர்.

திமுக 10 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றன. பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கானது என்பதால் திமுக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் மணிகண்டன் மனைவி ஜெயந்தி 7-வது வார்டிலும், பேரூர் செயலாளர் அண்ணாதுரை மருமகள் சங்கீதா 2-வது வார்டிலும் போட்டியிட்டனர்.

இருவரும் வெற்றிப் பெற்ற நிலையில், தலைவர் பதவி யாருக்கு என எதிர்பார்ப்பு எழுந்ததது. தலைவர் பதவி ஜெயந்திக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் அண்ணாதுரை அதிருப்தி அடைந்தார். இது குறித்து தகவலறிந்த அமைச்சர் செந்தில்பாலாஜி எம்எம்ஏ, இளங்கோவிடம் சமாதானப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அண்ணாதுரை பேரூர் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது ஆதரவு வார்டு உறுப்பினர்கள் எம்எல்ஏ இளங்கோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

6 வார்டு உறுப்பினர்களும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை இரவு பத்திரமாக பாதுகாத்த திமுக அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலுக்கு அழைத்து வந்துவிட்டனர். சங்கீதா தேர்தலில் பங்கேற்காத நிலையில், ஜெயந்தி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE