சென்னை: சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற தேனி மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானத்தால் கட்சியில் மீண்டும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸும் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவை தேர்தல், அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியை தழுவியது. திமுக ஆட்சியில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை.
ஒவ்வொரு தேர்தல் முடிவு வெளியான பிறகும், ‘ஒற்றை தலைமை வேண்டும். நீக்கப்பட்ட சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள் அதிமுகவுக்குள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘சசிகலாவை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது’ என்று அனைத்து மாவட்டகழகங்களிலும் தீர்மானம் நிறைவேற்றுமாறு கடந்த ஆண்டு அதிமுகபொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் ஆதரவுமாவட்டச் செயலாளர்கள் உள்ளதேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட6 மாவட்டக் கழகங்களில் இந்ததீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு கட்சிக்குள் பெரியஅளவில் எதிர்ப்பு கிளம்பாததால் இப்பிரச்சனை நீர்த்துப்போனது.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்டோபரில் கருத்து தெரிவித்தார். இதன்மூலம், சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் 2-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓபிஎஸ் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘கட்சி மீண்டும் பலமாக வேண்டுமானால் சசிகலா, தினகரனை ஒருங்கிணைத்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலா இணைப்பு குறித்து முதல்முறையாக அதுவும் ஓபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமைஅலுவலகத்துக்கு வந்த தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமிடம் கேட்டபோது, “தேர்தல்தோல்வி என்பது தற்காலிகமானதுதான். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று அமைப்பு ரீதியான மாவட்டக் கழகங்களில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டக் கழகத்தில் தற்போது போடப்பட்டுள்ள தீர்மானம் தேவையற்றது. இதை ஓபிஎஸ்ஸே ஏற்கமாட்டார். எனவே, இதை கட்சியினர் பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்றார்.
இதுகுறித்து தேனி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான சையது கானிடம் கேட்டபோது, “சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்என்று தலைமை அறிவுறுத்தியபோது, தேனி மாவட்டம் அவ்வாறுநிறைவேற்றவில்லை. சசிகலா, தினகரனை கட்சியில் இணைத்திருந்தால், தொடர் தோல்வியை அதிமுக சந்தித்திருக்காது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதை மையப்படுத்தி, ‘கட்சிகள், அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கு சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைஓபிஎஸ்ஸிடம் வழங்கினோம். தொண்டர்களின் கருத்தை ஏற்பதாகவும், தலைமைக் கழகத்திடம் இதை தெரிவிப்பதாகவும் கூறினார். எங்களது மாவட்டக் கழகத்தின் தீர்மானம் தவறானது என்று கூற மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு உரிமை இல்லை” என்றார்.
இதற்கிடையே, தேனி மாவட்டஅதிமுகவின் தீர்மானம் கட்சிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியதால், பெரியகுளம் பண்ணை வீட்டில், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் சையது கான், முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோருடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சேலத்தில் தனது வீட்டில் எம்எல்ஏக்கள் உட்பட 12 பேருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிடம்கேட்டபோது, “சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்ஸுக்கு எந்த கருத்தும் இல்லை. தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்பதேஅவரது விருப்பம். அதைத்தான் தேனி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். தவிர, தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஓபிஎஸ் அங்கு இல்லை.அவர் ஏற்கெனவே கூறியதுபோல சசிகலா விவகாரத்தில் தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது” என்றனர்.
அதேபோல, ‘பொதுக்குழுவின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, மாவட்டக் கழகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் கலந்து பேசி முடிவு எடுக்கவேண்டும். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago