உக்ரைனில் பயிலும் காரைக்கால் மாணவர்களின் குடும்பத்தாருடன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் சந்திப்பு 

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: உக்ரைனில் படித்துவரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் குடும்பத்தாரை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் இன்று நேரில் சந்தித்து தைரியமூட்டினார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், 2 மாணவிகள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் படித்து வரும் காரைக்கால், காரைக்கால்மேடு, திருமலைராயன்பட்டினம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 5 மாணவர்களின் குடும்பத்தாரை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.

மாணவர்களை அழைத்துவர பிரதமர், புதுச்சேரி முதல்வர் ஆகியோர் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், இந்திய தூதரகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினார். மேலும் தைரியமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். உக்ரைனில் உள்ள மாணவர்களுடன் செல்போன் மூலம் பேசி, மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து எடுத்துக் கூறி தைரியமூட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க பிரதமர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களையும் பாதுகாப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் மீட்டு அழைத்து வருவதற்கான முயற்சிகள் இந்திய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போர் பதற்றம் தணிந்த பின்னர் அம்மாணவர்கள் உக்ரைன் செல்லவும், கல்வியை தொடரவும் தேவையான ஏற்பாடுகள், செலவுகளை மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செய்யும் என்றார். மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE