வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து அரவணைத்த குடும்பத்தினர்: ஊரே வியக்க விழா நடத்திய நெகிழ்ச்சி!

By ந.முருகவேல்

கடலூர்: விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவருக்கும் அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறிய அவரை, அழைத்து வந்து அவரது உணர்வுக்கு மதிப்பளித்த குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருநங்கைகள் (ஆணுக்கான அடையாளத்துடன் பிறக்கும் இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை பெண்ணாக உணர்பவர்கள்) பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி, மூத்த திருநங்கைளிடம் தஞ்சமடைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் குடும்ப விபரத்தைக் கூட யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று திருநங்கையின் குடும்பத்தாரும் சமூக கிண்டல் காரணமாக திருநங்கையாக மாறும் தங்களது பிள்ளைகள் குறித்து யாருக்கும் தெரிவிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இதனிடையே, திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் திருநங்கைக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் சில குடும்பங்களில் அவர்களை வெறுக்காமல், குடும்பத்திலேயே இணைத்துக் கொள்வதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

அந்த வகையில் விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் (21). இவரது தந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அவரது தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்துள்ளார்.

அவ்வாறு அங்கு நிஷாந்த் சென்றதை அறிந்து, அவரது பெற்றோர் சமரசம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து, உணர்வுக்கு மதிப்பளித்து, தனது மகன் பெயரை நிஷா என மாற்றியுள்ளனர். மாற்றியதோடு, அவரது பூப்பருவத்தைக் கொண்டாடும் வகையில், அவருக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி தனது மகனை பெண்ணாக அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர். நிஷாவுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து, விருந்துண்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து அவருக்கு விழா நடத்தியிருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு ஐக்கியமாகிவிடுவர். அவ்வாறு ஐக்கியமாகும் நபருக்கு மூத்த திருநங்கைகள் விழா நடத்தி, மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை பெண்ணாக அங்கீகரிப்பர். ஆனால் முதல்முறையாக திருநங்கையின் குடும்பத்தினரே இதுபோன்று செய்துள்ளது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்