உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் உக்ரைன் மீதுதான். அந்நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை. அடுத்து என்ன நடக்கும் என ஊகிப்பதை விட 'பெரிதாக எதுவும் நடந்துவிடக் கூடாது' என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருக்கிறது.
உக்ரைனில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்ட கணமே ஒவ்வொரு நாடும் அங்கு தங்கியிருந்த அந்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து கல்வி, தொழில் ரீதியாக அந்நாட்டிற்குச் சென்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை, 5 விமானங்கள் மூலம் இந்தியா்கள் அங்கிருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பிய ஆறாவது சிறப்பு விமானம் நேற்று மாலை 6 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. இதில், 21 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 280 இந்தியர்கள் மீட்கப்பட்டிருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரில், 6 மாணவர்களும், 15 மாணவிகளும் வந்திருந்தனர்.
இந்த மாணவர்கள் அனைவரும், உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள உஸ்கரண்ட் நகரின் எல்லையில் அமைந்துள்ள உஸ்கரண்ட் தேசிய மருத்துவப் பல்கலைகழகத்தின் மாணவர்கள். ஆபத்தான போர்ச்சூழல் இருந்து தமிழகம் திரும்பிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் தோழிகளான 3 மாணவிகளும் திரும்பி வந்துள்ளனர். சென்னை வந்த அந்த மாணவிகள் அவர்களது பெற்றோருடன் சொந்த ஊர் திரும்பிவருகின்றனர்.
இந்நிலையில், ’இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் மாணவி ஸ்ருதி பகிர்ந்தவை: "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள நித்ரவிளை எனது ஊர். எனது தந்தை பிசினஸ் செய்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நான் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றேன். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. என் ப்ரண்ட்ஸோட அண்ணன் ஒருவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தார். அதன் மூலமாகத்தான் எங்களுக்கு உக்ரைன் நாடு எங்களுக்குப் பரிச்சயமானது.
அதுமட்டுமின்றி, மருத்துவம் படிப்பதற்கு உக்ரைன் நாடு சிறந்தது எனக் கூறப்பட்டதால், நானும் எனது தோழிகள் இருவர் உள்பட 3 பேர் அங்குள்ள Uzhorod National Medical University-ல் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தோம். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக நாங்கள் திரும்பி வந்துள்ளோம்" என்றார்.
மாணவி ஆசிகா கூறியது: "நான் 2019-ம் ஆண்டுபனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று, கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் எனது அம்மாதான் என்னை படிக்க வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் எனது சொந்த ஊராக இருந்தாலும், அம்மாவின் பணி காரணமாக தற்போது பேச்சிப்பாறையில் வசித்து வருகிறோம்.
உக்ரைனில் உள்ள Uzhorod National Medical University-ல் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். மருத்துவம் படிப்பதற்கு உக்ரைன் சிறந்த இடமாக இருப்பதுடன், இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில், செலவு குறைவாக இருந்ததால், உக்ரைனில் சென்று மருத்துவம் படிப்பதென்று முடிவெடுத்தோம்.
முதலாம் ஆண்டு விசா செலவு இருந்ததால், அதனுடன் சேர்த்து ஆண்டுக்கட்டணமாக ரூ.7.50 லட்சம் வரை செலுத்தியுள்ளோம். இதன்பின்னர், ஆண்டுக்கு 3.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எங்களது கல்லூரி உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் (Western Side) அமைந்துள்ளது. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கிழக்குப் பகுதியில் (Eastern Side) சிக்கியுள்ள மாணவர்கள்தான் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
நாங்கள் உக்ரைன் நாட்டின் எல்லையைக் கடக்க கல்லூரி பெரிய அளவில் உதவியது. கிட்டத்தட்ட 240 மாணவர்கள், ஹங்கேரி நாட்டின் எல்லை வழியாக மீட்கப்பட்டோம். இருப்பினும் எல்லைப்பகுதியில் நாங்கள் 2 மணி நேரமாக காத்திருந்தோம்.
அந்நாட்டில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக, எங்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும், நாங்கள் கையில் தண்ணீர், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றிருந்தோம். இத்தனை கஷ்டங்களுக்கிடையே, ஹங்கேரியில் இருந்து, Budapest விமான நிலையத்தை சென்றடைந்தோம்.
அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை அன்புடன் வரவேற்று, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து எங்களை பத்திரமாக விமானம் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இருந்த அதிகாரிகள், பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இங்கு வந்தபின்னர், எங்களது பெற்றோரை சந்தித்த தருணம்தான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்றார்.
மாணவி அசிதா பேசியது: "கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் எனது ஊர். எனது தந்தை கூலி வேலை செய்பவர், தாய் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். ஓராண்டு கோச்சிங் கிளாஸ் சென்று படித்து நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். இங்கு மருத்துவம் படிக்க அதிகமாக செலவாகும் என்பதால்தான் உக்ரைன் நாட்டுக்குச் சென்று மருத்துவம் படிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். உக்ரைன் கல்வியில் மட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாடு.
ஸ்ருதி, ஆசிகாவுடன் நானும், அங்குள்ள Uzhorod National Medical University-ல் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். நான் இங்குவந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. இந்த போர் இவ்வளவு உக்கிரமடையும் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. அதுமட்டுமின்றி எங்களது கல்லூரி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, இந்தப் பகுதியில் போர் தீவிரமடையவில்லை. நாங்கள் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் யாரும் வரவில்லை.
ஆனால், உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மாணவர்கள்தான் ஆபத்தான சூழலில் இருக்கின்றனர். அவர்கள்தான் அண்டர்கிரவுண்ட்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை. என்னுடன் கோச்சிங் கிளாஸில் படித்தவர்கள் அந்தப் பகுதியில் உள்ளனர்.
அவர்களை எங்களால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. முடிந்தவரை அவர்களுடன் இன்ஸ்டா மூலம் பேசிக் கொள்வோம். நாங்கள் உக்ரைனில் இருந்து வெளியேற, கல்லூரி நிர்வாகம் பெரிய அளவில் உதவியது. ஆனால், கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மாணவர்கள் அவர்களது சொந்த முயற்சியில்தான் (Own Risk) அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ஒரு நாளைக்கு 80 கிலோமீட்டர் வரை நடந்து சென்றதாகவும், எல்லைப் பகுதிகளைக் கடக்க 10 மணி நேரம் வரை காத்திருப்பதகாவும் தகவல் கூறுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் கண் எதிரே குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்" என்றார்.
இந்த மூன்று மாணவிகளின் ஒரே கோரிக்கை, தங்களை இந்திய அரசாங்கம் மீட்டதைப் போன்று, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும் என்பதுதான். போர்ப் பகுதியில் இருந்து திரும்பிய இந்த மாணவர்கள் மட்டுமின்றி, அனைவரது எதிர்பார்ப்புமே உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களும், அப்பாவி பொதுமக்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago