சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியதாரர்களையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியதாரர்களையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம்-2022 தொடர்பான மாநில கருத்தரங்கம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில தலைவர் நெ.இல.சீதரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் த.குப்பன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரை ஆற்றினார். கருத்தரங்கி்ல் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு அக்கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் அரசு மருத்துவமனைகளை இணைக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் 3-வது தரப்பு ஈடுபடக்கூடாது. இந்த திட்டத்தில் இணையும் உரிமையும், இணையாமல் இருக்கும் உரிமையும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக காப்பீட்டுத்தொகை வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக, மாநிலசெயலாளர் குரு.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE