திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு - பின்புலத் தகவல்கள்

By என்.சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் சரவணன், சந்தோஷ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் ஜவ்வாதுமலையடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த நடுகற்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர்.ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் எங்கள் ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குரும்பேரி பகுதியில் பெரியவர்கள் கோயில் என்ற இடத்தில் 4 நடுகற்கள் இருப்பதை நாங்கள் கண்டோம்.

இதில், 3 சிற்பங்கள் கோயில் உள்ளேயும், ஒரு சிற்பம் கோயிலுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில் உள்ள மரத்தடியில் இருந்தது. இந்த நடுகற்களில் உள்ள வீரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. வீரர்களது வலது கரத்தில் போர் வாளும், இடது கரத்தில் வில்லும் ஏந்திய நிலையில் வீரர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் முதுகில் அம்புகள் நிறைந்த கூடு ஒன்று காணப்படுகிறது.

காதுகளில் குண்டலமும், கழுத்தில் ஆபரணங்களும் இடுப்பில் குறுவாளும் காணப்படுகிறது. வீரர்கள் இறந்த உடன் அவரவர் மனைவியர் உடன்கட்டை ஏறியதை குறிப்பதாக வீரர்கள் உடன் அதற்கு கீழே அவர்களது மனைவியரின் உருவமும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் இயற்கை வழிபாட்டுக்கு அடுத்ததாக முன்னோர்களை வழிபடும் மரபு இருந்தது. அதற்கான சான்றுகளே நடுகற்களாகும். நடுகற்களை தமிழர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிப்பட்டு வருவதை சங்க இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன.

அதன் தொடர்ச்சியாக சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் இன்று வரை மக்களிடையே நிலவுகிறது. இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக குரும்பேரி கிராமத்தில் உள்ள இந்த நடுகற்கள் விளங்குகின்றன. இந்த நடுகற்கள் பெரியவர்கள் கோயில் என அழைப்பது முன்னோர் வழிப்பாட்டினை நமக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

நடுகற்கள் இப்பகுதியில் நடைபெற்ற பூசலில் உயிர் துறந்து வீரர்களுக்காக எடுக்கப்பட்டவையாகும். வீரர்கள் இறந்த நிலையில் அவர்களது மனைவியரும் உடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதால் அவர்களது செயலை போற்றும் விதமாக அவர்களது உருவங்களையும் இணைத்து நடுகற்கள் வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள அமைப்பினை வீரர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த நடுகற்கள் விஜயநகர மன்னர் காலம் அதாவது, 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்ககக் கூடும் என தெரிகிறது.

இக்கோயில் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது முந்தைய காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் அருகாமையில் உள்ள ஜவ்வாதுமலைப்பகுதிக்கு பயணம் சென்ற போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கள்வர்கள் இவர்களை தாக்கி உடமைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை கண்ட மலைவாழ் மக்கள் இருளர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரன் மன்னருக்கு ஆதரவதாக போரிட்டுள்ளார். இந்த சண்டையில் இருளர் இன வீரர் இறந்து போகிறார். இறுதியில் மன்னரும் உயிரிழக்க நேர்கிறது. மன்னர் இறப்பதற்கு முன்பாக போரில் தம்மை உதவிய இருளருக்கும் நடுகல் எடுத்து வழிபட வேண்டும் என்றும், அவரை வழிப்பட்ட பிறகே தம்மை வழிப்பட வேண்டும் என கட்டளையிட்டதாக கூறுகின்றனர்.

மரத்தடியில் இருந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் இன்றளவும் ‘இருளர் கல்’ என்றே அழைக்கின்றனர். தை மாதம் காணும் பொங்கல் தினத்தன்று இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

இருளர் கல்லினை வழிப்பட்ட பிறகே பெரியவர் கல்லினை வழிபாடுகிறார்கள். இந்த நடுகற்கள் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பொருத்தமானதாகவும் அமைகிறது. வரலாற்று சிறப்பு மிக்கி இந்த நடுகற்கள் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நடுகற்களாக அமைந்துள்ளது. இதை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்