சென்னை: வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்புக்கான பேச்சுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை (United Nations Environment Assembly) மாநாடு கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்று தொடங்குகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின் நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; இது உலக நலனுக்கு எதிரானது.
நைரோபியில் மார்ச் 4-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடக்கும் இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 193 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர் என சுமார் 2000 பேர் பங்கேற்க உள்ளனர். 1972 ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் மாநாட்டில் தொடங்கப்பட்ட ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UN Environment Programme) அமைப்பின் 50-ஆவது ஆண்டு விழாவாகவும் இம்மாநாடு கூடுகிறது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் தொடங்கவுள்ளன.
பிளாஸ்டிக் மாசுபாடு ஒரு பேராபத்து ஆகும். சுற்றுச்சூழல் கேடுகள், நீர்வள அழிவு, நகர்ப்புற வெள்ள பாதிப்பு, விவசாய பாதிப்பு, உயிரி பன்பய அழிவு, கடல்வள அழிவு, பறவைகள் அழிவு, காலநிலை மாற்றம் என எண்ணற்றக் கேடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் விளைகின்றன. பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்களின் உணவுச் சங்கிலியில் இணைவதாலும், தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டை உருவாக்குவதாலும் பலவகை உடல்நலக் கேடுகளுக்கு காரணமாக உள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், பிளாஸ்டிக் உற்பத்தி முதல் கடல் வளத்தை மாசுபடுத்துவது வரை அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்கும் வகையிலும், அனைத்து நாடுகளையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் வகையிலும் ஐ.நா. பிளாஸ்டிக் ஒப்பந்தம் அமைய வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
» பிப்ரவரி 27: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» பிப்ரவரி 27: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
இத்தகைய சூழலில் பிளாஸ்டிக் ஒப்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மூன்று வகையான வரைவுகள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன. ருவாண்டா, பெரு ஆகிய நாடுகள் தயாரித்துள்ள வரைவு முழுமையானதாகவும், உலக நாடுகளை கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வரைவை 70 நாடுகள் ஆதரித்துள்ளன. ஜப்பான் தயாரித்துள்ள இரண்டாவது வரைவு பிளாஸ்டிக் குப்பையின் அனைத்து நிலைகளையும் கருத்தில் கொள்ளாமல் கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இந்த வரைவுக்கு இலங்கை, கம்போடியா, பலாவு ஆகிய நாடுகளின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது வரைவில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கத் தேவையில்லை; விரும்பும் நாடுகள் மட்டும் அதை செய்து கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எந்த நாடும் ஆதரிக்கவில்லை.
ஆனாலும், மூன்று வரைவுகளும் நைரோபி மாநாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து, இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் பன்னாட்டு அரசு பேச்சுக்குழு, இது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இது குறித்து விவாதிக்கும். இரு ஆண்டு விவாதத்திற்குப் பிறகு 2024- ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்திருக்கிறது.
உலகெங்கும் கடந்த 70 ஆண்டுகளில் 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 700 கோடி டன் குப்பையாக நிலத்திலும் நீரிலும் வீசப்பட்டுள்ளது. மீதமுள்ள பிளாஸ்டிக் தீயில் எரிக்கப்பட்டு, கொடிய நச்சுக்காற்றாக மாற்றப்பட்டுள்ளது. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னாக இருந்த ஆண்டு பிளாஸ்டிக் உற்பத்தி, 2020-ஆம் ஆண்டில் 37 கோடி டன்னாக அதிகரித்து விட்டது. இது 2050-ஆம் ஆண்டில் 100 கோடி டன்னாக பெருகி விடும். அப்போது கடலில் உள்ள மீன்களின் எடையை விட, பிளாஸ்டிக் குப்பையின் எடை அதிகமாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த கடல் வளத்திற்கும் பேரழிவாகி விடும். இதைக் கட்டுப்படுத்தத் தேவையான அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஒப்பந்தம் உருவாக்கப்படுவது தான் உலகுக்கு பயனளிக்கும்.
இந்த இலக்கு எட்டப்பட வேண்டுமானால், ஐ.நா. உருவாக்கும் பிளாஸ்டிக் ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்துவதாக வேண்டும்; அனைத்து நிலையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதாக இருக்க வேண்டும்; ஒப்பந்தத்தை செயல்படுத்த பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் கழிவு பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற முடியும். இதற்கு ருவாண்டா - பெரு நாடுகளின் வரைவு தான் பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
எனவே, இந்திய அரசு யாருக்கும் பயனளிக்காத வரைவை திரும்பப் பெற்றுக்கொண்டு, ருவாண்டா & பெரு ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மக்கள் நலனிலும் அக்கறையுள்ள அனைவரும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்து, மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்த வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago