கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலைக்கு மஹா சிவராத்திரியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாகச் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.
முள்ளாங்காடு வனத்துறை சோதனைச் சாவடி வழியாக, மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கோயில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக சுமார் 6 கி.மீ பக்தர்கள் மேலே நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது பலர் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின் பண்டங்களின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருகின்றனர்.
இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 7 டன் கழிவுகளை வனத்துறையினர் மலைப்பாதைகளில் இருந்து அகற்றினர். இவ்வாறு கழிவுகளை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “வனப் பணியாளர்கள், உள்ளூர் சூழல் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து மலையேறும் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அடிவாரத்தில் உள்ள நுழைவுவாயிலில் தடுப்புகள் அமைத்து, வரிசையாக ஒருவர் பின் ஒருவர் நுழையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் சூழல் காவலர்களுக்கு ஊதியம், அனைவருக்கும் உணவு மற்றும் மலையேற்றப் பாதையில் விட்டுச்செல்லப்படும் கழிவுகளை தூய்மைப்படுத்தவும், வன உயிரின பாதுகாப்பு பணிகளுக்காகவும் பக்தர்களிடம் விருப்ப சூழல் பாதுகாப்பு நிதி சேகரிக்கப்படுகிறது. இது கட்டாயம் இல்லை. பக்தர்கள் விரும்பினால் அளிக்கலாம். இந்த நிதி முறையாக வன மேம்பாட்டு முகமை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், சிகரெட், பீடி, மதுபானம் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. குப்பையை வனப் பகுதியிலேயே விட்டு வர வேண்டாம். வெள்ளியங்கிரி மலைப்பாதை பல இடங்களில் செங்குத்தாக அமைந்துள்ளதால் ஆரோக்கியமான உடல் நலம் உள்ளவர்கள் மட்டும் சென்று வரலாம்” என்றனர்.
இதுதொடர்பாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறும்போது, “வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ள வேண்டும். பணம் பெற்றதற்கு அடையாளமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டிவிட வேண்டும். மலையேறி, இறங்கியபிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை காண்பித்து வைப்புத்தொகையை பக்தர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மலை மீது பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அப்படியே தூக்கி எறிவது தவிர்க்கப்படும். கழிவுகள் தேங்குவது குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றனர்.
கோவை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, “குடிநீர் பாட்டிலுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை திருப்பி அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago