மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.

சிங்களக் கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE