மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்: ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி

By எஸ்.முஹம்மது ராஃபி

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்திகளின் எதிரொலியாக இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் நூறுவிதமான பவளப் பாறைகள், 200 வகையான கடல் தாவரங்கள், சங்குகள், கடல் ஆமை, கடற்குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசு, டால்பின் இப்பகுதியில் காணப்படுகின்றன.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு அதிக எண்ணிக்கையில் கடல் பசுக்கள் இருந்தன. தற்போது அவை வெகுவாக குறைந்துவிட்டன. இந்திய வனவிலங்கு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலில் இந்திய கடல் பகுதிகளில் 200 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பின்பற்றுவது, அதிக அளவில் நடக்கும் கடல் பசு வேட்டைகள், கடலில் புற்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் கடல் பசுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் அழிந்துவரும் கடல் பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரூ.5 கோடியில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசின் வனத் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத் துறையினர் கூறியதாவது:

கடல் பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 3.9.2021-ல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தற்போது கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஆய்வுப் பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை. எனவே, இத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு வனத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று கூறினர்.

கடல் பசுவின் முக்கியத்துவம் என்ன?

கடல் பசுவை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கின்றனர். கடல் பசு வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். அதிகபட்சம் 4 மீட்டர் நீளம், ஆயிரம் கிலோ எடை வரை இருக்கும். 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.

கடலில் 30 அடி ஆழம் வரை சென்று கடற்புற்களை மேயக்கூடிய கடல் பசுக்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கடலின் மேல் மட்டத்துக்கு வந்து மூச்செடுக்கும். கடல் பசுவின் கர்ப்பக் காலம் ஓராண்டு ஆகும். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியைத்தான் ஈனும்.

கடல் பசுவின் இறைச்சி மருத்துவ குணமுள்ளது என்பதால், அதை அதிக அளவில் வேட்டையாடி வருகின்றனர். மேலும், அதன் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகளும், எலும்பில் இருந்து மருத்துவப் பொருட்களும், கொழுப்பில் இருந்து தைலங்களும் தயாரிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்