சென்னை: "தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும், சம்பந்தப்படட துறைகள் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்வதையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்த ஆண்டு துவக்கத்தில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்கேவிஎம் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிபட்டி கிராமத்தில் உள்ள சோலை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது என்ற வரிசையில், நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக செய்தி வந்துள்ளது ஆற்றொணாத் துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று முன்தினம் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்துக் கலவை நிரப்பும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இந்த வெடி விபத்தில் ஈராட்சி ராமர், தொட்டம்பட்டி ஜெயராஜ், குமாரபுரம் தங்கவேல் மற்றும் நாலாட்டின்பூதுர் மாடமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த விபத்து உட்பட, இந்த ஆண்டு மட்டும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் 12 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவதும், இதன்மூலம் தொழிலாளர்கள் பலியாவதும் தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கின்றது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே காரணம் என்று இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிர்வாகமும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கண்காணிக்க வேண்டும். அதேபோல், பட்டாசுத் தொழிற்சாலை நிர்வாகமும் அரசினால் விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வெடி விபத்துகள் என்பது பொதுவாக மருந்துக் கலவை மேற்கொள்ளும் இடத்தில்தான் நடக்கிறது. இந்த மருந்துக் கலவை மேற்கொள்ளும் பணி தகுதியானோரின் மேற்பார்வையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றால் வெடி விபத்துகள் தவிர்க்கலாம் என்றும், இதன் காரணமாக விபத்துகள் குறைந்து உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேற்படி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும், தொடர்புடையத் துறைகள் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கின்றனவா என்பதையும் ஆராயவும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago