தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பிப்.28-ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 28-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 28-ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து வரும் நாட் களில் தெரிவிக்கப்படும்.

கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 26-ம் தேதி (இன்று) லேசான மழை பெய்யக்கூடும்.

27-ம் தேதி கோவை, திருப்பூர்,திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 26-ம் தேதி மணிக்கு 40 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE