மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4-ல் மறைமுகத் தேர்தல்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் வரும் மார்ச் 4-ல், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடத்தப்பட்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாதரணத் தேர்தல்கள் 19.02.2022 அன்று நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் 22.02.2022 அன்று அறிவிக்கப்பட்டன.

மேற்படி தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 02.03.2022 (புதன்கிழமை) அன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர்/செயல் அலுவலர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் 04.03.2022 அன்று முற்பகல் 9.30 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

மேலும், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி/பேரூராட்சி துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் அன்றைய நாளிலேயே பிற்பகல் 2.30 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 02.03.2022 அன்று பதவி ஏற்றுக் கொள்ளவும் 04.03.2022 அன்று நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் கலந்து கொண்டு மேற்படி தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற தங்கள் ஒத்துழைப்பினை தரும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE