இலங்கையிலிருந்து மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வர் கடிதம்

புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி, காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டுத்தெருவைச் தேர்ந்த வீரமணி, செல்வமணி, திலீபன், ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து மீனவர்களும், தமிழகத்திலுள்ள நாகை தரங்கம்பாடியைச் சேர்ந்த 8 மீனவர்களும் 23ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கைவ்கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று இரவு கடிதம் எழுதியுள்ளார், அதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களின் படகையும் இலங்கையில் இருந்து மீட்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீனவர் நலன் கருதி இப்பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம் தந்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் உள்ள அனைவரையும் உடனே விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE