'எதிர்காலத்தில் அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும்'- கூட்டுறவுத் துறை அமைச்சர் பேச்சு கேலிக்கூத்தாகவுள்ளது: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, எதிர்காலத்தில் அதிமுக திமுகவில்
சங்கமமாகிவிடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சரின் பேச்சு கேலிக்கூத்தாகவுள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில்
அதிமுக இருக்காது என்றும், அது திமுக-வில் சங்கமமாகிவிடும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி. ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால், அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். கடலினைப் போன்றது.
ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோதும், அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியை அமைத்தபோதும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், 'தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவருமான நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், சோமசுந்தரம், கிருஷ்ணசாமி, குழந்தைவேலு ஆகியோர் உட்பட திமுகவின் முன்னணித் தலைவர்கள், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிமுக ஐக்கியமானதையும், திமுக கூடாரமே காலியானதையும், அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் திமுக வனவாசம் இருந்ததையும், கூட்டுறவுத் துறை அமைச்சர் மறந்துவிட்டார் போலும்!

அடுத்தபடியாக, சிறிய மாநகராட்சிகளையாவது அதிமுக கைப்பற்றி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது திமுக ஆட்சிக் காலத்தில்தான். சென்னை உயர் நீதிமன்றத்திடமிருந்தே 'நற்' சான்றிதழ் பெற்ற கட்சி திமுக தேர்தல் நடைபெற்ற விதம் அதிமுக-வினருக்கு நன்கு தெரியும் என்பதால் இதில் கட்சியினருக்கு எவ்விதமான ஆதங்கமும் இல்லை.

"பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி. இதனால் மகிழவே கூடாது என்பதல்ல. அது முடியாத காரியம். இதனால் மயக்கமடைந்து விடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான் புகழுரைக் கேட்கும்போது, தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும். புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது." என்றார் அண்ணா.

தற்போது மயக்கத்தில் இருக்கிறார் அமைச்சர். அண்ணாவின் பொன்மொழியைப் படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர் விடுபட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் குறிப்பிட்டதுபோல், அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்பதையும், அதிமுக ஒருநாளும் திமுகவில் சங்கமமாகாது என்பதையும் அமைச்சர் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்