சென்னை: ”முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற திங்கட்கிழமை (பிப்.28) காலை 10.30 மணியளவில், தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குத் தெளிவாகப் புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளைத் தந்து கொண்டிருந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாரை, முதல் தகவல் அறிக்கையில் சொல்லி இருக்கும் எந்த சட்டப் பிரிவுகளின் கீழும், எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்தும், பிணையில் வரமுடியாத அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில், வருகின்ற 28.2.2022 – திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஒரு குற்றச் செயல் நடைபெறுகிறது என்று சொன்னால் அதை தட்டிக் கேட்பதற்கும், அந்தக் குற்றம் நடைபெறா வண்ணம் குற்றச் செயலில் ஈடுபடும் நபரைக் கைது செய்வதற்கும் (Private Arrest) எல்லா நபருக்கும் உரிமை உள்ளது என்று சட்டம் சொல்லுகிறது. அதன் அடிப்படையில், கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல் துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது நியாயமான செயல்.
மேலும், பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள, ஒரு குற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற, தொடர் குற்றம் புரியும் ஒரு குற்றவாளி நரேஷ்குமார் என்பவர் தேர்தல் நாளன்று அவர் வசிக்கும் பகுதிக்கும், அவர் வாக்களிக்கும் பகுதிக்கும் சம்பந்தம் இல்லாத வாக்குச்சாவடிக்கு வந்து திமுகவிற்கு ஆதரவாக கள்ள ஓட்டு போடுவதற்கு, அவரோடு முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் முனைப்பு காட்டியபோது, அதை சட்டத்திற்கு உட்பட்டு தட்டிக் கேட்கின்ற வகையில், அவரின் கள்ள ஓட்டு நடவடிக்கையை தடுக்கின்ற விதமாகவும், அவரைப் பிடித்து தொடர் குற்றவாளி என்பதன் அடிப்படையில் அவரிடம் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா என்பதற்காகவும், அவரை சோதனை செய்து காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்ட இந்தச் செயலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது திமுக அரசின் பாசிச மனோபாவத்தைத் தான் காட்டுகிறது.
கடந்த 23.2.2022 அன்று நீதிமன்றத்தில் பிணை மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மேலும் ஜெயக்குமாரை சிறையில் வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை அறிந்த திமுக காவல் துறை, எந்த விதத்திலும் பொருந்தாத, எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாத சட்டப் பிரிவுகளை மாற்றி, முதல் தகவல் அறிக்கையை மாற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது, கொடூர மனம் படைத்த திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் பெரும்பான்மையோர் கருதுகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட வந்ததைத் தடுத்து, காவல் துறையிடம் ஒப்படைத்த பிறகு, அவர் மீது வழக்கு தொடுக்காத திமுக காவல்துறை, அடுத்த வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற ஜெயக்குமாரை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்த காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல் செய்தார் என்பதன் அடிப்படையில், பிணையில் விடக்கூடிய வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பிய பிறகு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று தெரிந்த பிறகு, அந்த முதல் தகவல் அறிக்கையையும் மாற்றம் செய்து பிணையில் வரமுடியாத வழக்குகளை சேர்த்து நீதிமன்றத்தில் திமுக காவல் துறை சமர்ப்பித்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் இன்று (24.2.2022) அந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தை சட்டமாகவும், நீதியை நேர்மறையாகவும் சந்திக்க இயலாத திமுக அரசு, தன் கைப்பாவையாக மாற்றி வைத்திருக்கக்கூடிய காவல் துறையை ஏவல் துறையாக்கி இதுபோன்ற பழிவாங்குதல் நடவடிக்கையை, எந்தப் பொதுஜனமும் ஏற்றுக்கொள்ளாத வகையில் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கக்கூடிய செயலாகும்.
உண்மை நிலையை உணராமல், யாரோ சொன்னதைக் கேட்டு மிகப் பெரிய குற்றப் பின்னணி கொண்ட, தொடர் குற்றம் புரியக்கூடிய, நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை தன்னுடைய தொண்டர் என பெருமையோடும், அந்தத் தொண்டனுக்கு ஒரு இன்னல் என்றால் நானே களம் இறங்குவேன் என கர்ஜிப்பதும், ஒரு முதல்வருக்கு, ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. காரணம், எந்தக் குற்றம் புரிந்தாலும் என் தலைவன் என்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தை திமுக-வினருக்கு அதன் தலைவரே அறிவுறுத்துவது போல உள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சபட்சமாக, நீதியை நிலைநாட்ட வேண்டும்; பிடிபட்டவருக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது; சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நல்ல நோக்கோடு செயல்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தனி மனிதத் தாக்குதலுக்கு உட்படுத்தி, சட்டத் தாக்குதல் நடத்தி, நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதை, எந்த நீதியும் ஏற்றுக்கொள்ளாது என்ற வகையில், திமுகவின் அடக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கையையும், ஏதேச்சாதிகாரப் போக்கையும், பாசிச நடவடிக்கையையும் கண்டிக்கின்ற விதத்தில், அதிமுக சார்பில் வருகின்ற 28.2.2022 – திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டத்தை ஆளும் திமுக அரசிற்கு எட்டுகின்ற வகையில் நடத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago