அதிமுகவுக்கு எதிர்காலமில்லை என கே.எஸ்.அழகிரி சொல்வது நகைப்புக்குரியது: கடந்து வந்த பாதையை அடுக்கி ஓபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுகவைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: "'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல' என்ற பழமொழிக்கேற்ப ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று 40 இடங்களுக்கு அல்லல்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி சிந்திக்காமல், அதிமுகவை விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1967-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தது கட்சி காங்கிரஸ் கட்சி. 55 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல், அதிமுக, திமுக என மாறி, மாறி அடுத்தவர் முதுகில் சவாரி செய்து ஒரு சில இடங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதைப்பற்றி சிந்திக்காமல், அதிமுகவுக்கு எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, 1952-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இதுவரை நடைபெற்ற 16 பொதுத் தேர்தல்களில் 6 முறை வெற்றி பெற்று, 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதாவது மொத்தமுள்ள 70 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 22 ஆண்டுகள் திமுகவும், 30 ஆண்டுகள் அதிமுகவும் ஆட்சி செய்துள்ளன. அதிமுக சந்தித்திராத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தோல்வியைக் கண்டு துவண்டதில்லை, மாறாக மீண்டெழுந்து வந்திருக்கிறது.

1996-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தாலும், அதன் பிறகு 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும், அதன் பின் நடைபெற்ற 2006-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து, 2011-ஆம் ஆண்டு ஆட்சியையும் பிடித்தது. பின்னர், 2014-ஆம் ஆண்டு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததோடு, எவ்விதக் கூட்டணியும் இல்லாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி எங்கள் கையை விட்டுச் சென்றது. திமுக ஆட்சி அமையப் பெற்றது. திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை. எனவே இதைவைத்து அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது. 'இலவு காத்த கிளி போல' ஏதாவது ஒன்றிரெண்டு மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்குமா என்ற ஆசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இதுபோல் பேசியிருப்பார் என்றே நான் கருதுகிறேன். சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அனைத்திந்திய அதிமுகவைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது.

அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 2024-ஆம் ஆண்டு நடைபெறப் போகும் மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்