மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் காப்புத் தொகை இழப்பு- அதிமுக தோல்வியால் ‘மும்மூர்த்திகளுக்கு’ நெருக்கடி

மதுரை மாவட்டத்தில் அதிமுக பல வார்டுகளில் காப்புத்தொகையை இழந்தது. இதனால், கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் மும்மூர்த்தி களாகக் கருதப்படுவோர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா. இவர்கள் மூவரும் தற்போது வரை கட்சியிலும் கடந்த ஆட்சியிலும் செல்வாக்குடன் இருந்தனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுக ஒரு உள்ளாட்சியைக்கூட கைப்பற் றவில்லை.

மாநகராட்சியில் அதிமுக 100 வார்டுகளில் தனித்துப் போட்டியிட்டது, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் கட்டுப்பாட்டில் 71 வார்டுகளும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் ராஜன் செல்லப்பாவின் கட்டுப்பாட்டில் 29 வார்டுகளும் உள்ளன.

71 வார்டுகளுக்கான வேட்பா ளர்கள் தேர்வில் செல்லூர் கே.ராஜூ வெற்றிபெறுவோருக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.

அதனால், போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத முன் னாள் கவுன்சிலர்கள் பலர், பாஜக, அமமுக சார்பிலும், சுயேச்சை யாகவும் போட்டியிட்டனர்.

புறநகர் கிழக்கு மாவட்டத்தின் வார்டு வேட்பாளர் தேர்விலும் ராஜன் செல்லப்பா கோட்டை விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் செலவுக்குப் பணம் வழங்கவில்லை என வேட்பாளர்கள் குமுறியபோது செல்லூர் கே.ராஜூ, ‘சீட்’ வாங்கும்போது செலவு செய்கிறோம் என்று சொல்லித்தானே வாங்கினீர்கள், நீங்களே செலவு செய்யுங்கள்' என்று கறாராகக் கூறிவிட்டார்.

ராஜன் செல்லப்பாவும் முன்புபோல் தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை. ஆர்பி.உதயகுமார் தீவிரமாகச் செயல்பட்டாலும் அவரது வியூகம் எடுபடவில்லை. இவர் கட்டுப்பாட்டில் இருந்த திருமங் கலம், உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர், டி. கல்லுப்பட்டி ஆகிய அனைத்து இடங்களும் பறிபோயின. மாவட்டத்தில் ஒரு உள்ளாட்சியைக்கூட கைப்பற்ற முடியவில்லை.

மாநகராட்சியில் அதிமுக 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 31 வார்டுகளில் காப்புத் தொகையை இழந்தது. செல்லூர் ராஜூ மாவட்டச் செயலராக உள்ள 71 வார்டுகளில் 14-லிலும், ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலராக உள்ள 29 வார்டுகளில் ஒரு வார்டிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

இருவரின் மாவட்டங்களிலும் போட்டியிட்ட 31 வார்டுகளில் அதிமுக காப்புத் தொகையை இழந்தது.

தேர்தல் பிரச்சாரத்துக்கு மதுரை வந்த முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிகூட மதுரையின் மும்மூர்த்திகள் என்று பாராட்டியதோடு சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றியைத் தேடி தந்ததாகப் பெருமிதம் கொண்டார். தற்போது மதுரை மாவட்ட உட்கட்சி பூசலால் அதிமுக கரைகிறதோ என்று தொண்டர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE