வேலூர் மெயின் பஜார் பகுதியில் மசூதி கட்ட திட்டம்: இந்து முன்னணி, பொதுமக்கள் எதிர்ப்பால் பதற்றம்

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட திட்டமிடப்பட்டதற்கு, அப்பகுதி மக்களும், இந்து முன்னணி அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வேலூரின் மெயின் பஜார் பகுதியில் உள்ளது சர்க்கார் மண்டித் தெரு. இந்த தெருவில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான 2400 சதுர அடி அளவிலான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் முன்புறம் குளிர்பான கடை ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் பின்புறம் வீட்டு உரிமையாளரின் முன்னோர்களின் சமாதி இருந்துள்ளது. இங்கு அவர்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது குளிர்பானக் கடை இருந்த இடத்தில் 8-க்கு 8 அடி என்ற அளவில் மசூதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், இந்து முன்னணியினரும், 'இந்தப் பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசிப்பதாலும், அருகில் கோயில் இருப்பதாலும் எதிர்காலத்தில் பிரச்சினை வரக்கூடும்' எனக் கூறி மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அந்த வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் இந்து முன்னணியினர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், காந்திரோடு, லாங்கு பஜார் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

மசூதி கட்டும் இடத்தை வஃக்பு வாரியத்துக்கு வழங்கிவிட்டதாக வீட்டு உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசாம்பவித சம்பவங்களைத் தவிர்க்க வேலூர் மெயின் பஜார் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மசூதி பிரச்சினை தொடர்பான பகுதியை டிஐஜி ஆனி விஜயா பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE